இராணுவ ரகசியங்களை வெளியிட்டது தேசத் துரோகம்: அர்னாப்பை குறிவைக்கும் காங்கிரஸ்
இந்தியாவில் தொலைக்காட்சிகளுக்கான தரவரிசை பட்டியலை வழங்கும் பார்க் நிறுவனம் மிகப்பெரிய முறைகேட்டில் ஈடுபட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது. இந்தப் புகாரில் ரிபப்ளிக் டிவியின் அர்னாப் கோஸ்வாமி மீதும் குற்றம் சுமத்தப்பட்டிருந்தது. டி.ஆர்.பி தரவரிசைப் பட்டியலை வெளியிடுவதில் ரிபப்ளிக் டிவி மிகப்பெரிய முறைகேட்டில் ஈடுபட்டதாக சர்ச்சை எழுந்தது.
இந்த நிலையில் பார்க் முன்னாள் தலைவர் பார்தோ தாஸ்குப்தா கைது செய்யப்பட்டுள்ளார். அவருக்கும் ரிபப்ளிக் ஆசிரியர் அர்னாப் கோஸ்வாமிக்கும் இடையேயான வாட்சாப் உரையாடல்கள் சமீபத்தில் சமூக ஊடகங்களில் லீக் ஆனது. அதில் பல அதிர்ச்சிகரமான தகவல்கள் தெரியவந்துள்ளன. புல்வாமா மற்றும் பாலகோட் தாக்குதல் பற்றிய தகவல்கள் அர்னாப் கோஸ்வாமிக்கு முன்கூட்டியே தெரிந்திருந்தது அம்பலமானது.
மேலும் முக்கியத்துவம் வாய்ந்த இராணுவ ரகசியங்கள் எப்படி அர்னாப் கோஸ்வாமிக்கு தெரியவந்தது என எதிர்க்கட்சியினர் கேள்வியெழுப்பி உள்ளனர். முன்னாள் பாதுகாப்பு துறை அமைச்சர் ஏ.கே.அந்தோணி, “இராணுவ ரகசியங்களை வெளியிட்டது தேசத் துரோகம்.
இதில் சம்மந்தப்பட்டவர்கள் அனைவரும் முறையாக விசாரிக்கப்பட்டு தண்டிக்கப்பட வேண்டும்” எனக் கூறியுள்ளார்.