குடியரசு தின விழாவில் பங்கேற்ற 287 ராணுவ வீரர்களுக்கு கொரோனா தொற்று
டெல்லியில் குடியரசு தின கொண்டாட்டத்தில் பங்கேற்ற ராணுவ வீரர்களில் 287 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை மக்களவையில் தாக்கல் செய்த அறிக்கை ஒன்றில் வெளியாகி இருக்கிறது. குடியரசு தின விழாவிற்காக ராணுவ அணிவகுப்பு உள்ளிட்ட நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வந்த 2518 ராணுவ வீரர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.
அவர்களின் 287 பேருக்கு தொற்று உறுதியானதாகவும் ஆனால் அவர்கள் அனைவருக்கும் அறிகுறி இல்லாத தொற்று தான் எனவும் பாதுகாப்பு துறை அமைச்சகம் தெளிவுபடுத்தியுள்ளது. இந்நிகழ்ச்சிகளில் பங்கேற்க வந்த 7 முதல் 10 நாட்களுக்குள் தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இதனையடுத்து, இவர்கள் அனைவரும் முகாம்களில் தனிமைப்படுத்தப் பட்டதாகவும் தொற்று குணமாகிய பத்து நாட்களுக்குப் பிறகு அவர்கள் மீண்டும் பணிகளுக்கு அனுமதிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.