ஆம்ஸ்ட்ராங் படுகொலை; உடன் இருந்தவர்களே உறுதுணை..அதிர்ச்சி அளிக்கிறது - பா.ரஞ்சித்
கொலைக்கு உடன் இருந்தவர்களே உறுதுணையாக இருந்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது என பா.ரஞ்சித் கூறியுள்ளார்.
ஆம்ஸ்ட்ராங் படுகொலை
பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் சென்னை பெரம்பூரில் உள்ள அவரது வீட்டின் வெளியே பேசிக்கொண்டிருந்த போது 6 பேர் கொண்ட கும்பலால் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், படுகொலைக்கு நீதி கேட்டும், உண்மை குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தியும், அந்த கட்சி சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
பா.ரஞ்சித்
அப்போது மேடையில் பேசிய திரைப்பட இயக்குனர் பா.ரஞ்சித், "ஆம்ஸ்டிராங் கொலை வழக்கில் தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டங்கள் நடந்து வருகிறது. இதன்மூலம், ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு விரைவாக செயல்படுவதற்கான தேவையை ஏற்படுத்தி உள்ளோம்.
உண்மைக் குற்றவாளிகளை கைது செய்யும் வரை போராட்டம் தொடரும். அதில் இருந்து பின்வாங்கப் போவதில்லை. மக்கள் கேள்வி எழுப்பியதால் அரசு பயந்து போய், விசாரணையை முடுக்கிவிட்டுள்ளது. ஆம்ஸ்ட்ராங்குடன் இருந்த நபர்களே அவரது கொலைக்கு உறுதுணையாக இருந்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது" என்று கூறினார்.