நாடே நாசமா போகுது... உங்களுக்கு ஐபிஎல் கேக்குதா? - கடுப்பான முன்னாள் இலங்கை வீரர்

Petchi Avudaiappan
in கிரிக்கெட்Report this article
இலங்கையில் பொருளாதார சீரழிவால் மிகப்பெரிய பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில், அந்நாட்டு கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் அர்ஜுனா ரணதுங்கா கடுமையான விமர்சனம் ஒன்றை முன்வைத்துள்ளார்.
இலங்கை கடந்த சில ஆண்டுகளாக கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்து வருகிறது. இதனால் அத்தியாவசிய பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. இதனால் அந்நாட்டு மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக மக்கள் வீதிக்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும் மின் தட்டுப்பாடு ஏற்பட்டு இருப்பதால் பல மணி நேரம் மின் தடை செய்யப்படுகிறது.
இதனிடையே கடந்த சில நாட்களுக்கு முன் இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மார்வன் அட்டபட்டு, சனத் ஜெயசூர்யா உட்பட பலரும் போராட்டத்தில் பங்கேற்றனர். இலங்கை முன்னாள் கேப்டன் அஜந்தா மேத்தியூஸ், சங்ககரா என சிலர் ட்விட்டரில் கருத்துக்களை தெரிவித்தனர்.
இந்நிலையில் சென்னை உட்பட ஒரு சில அணிகளில் விளையாடி வரும் இலங்கை வீரர்கள் உடனடியாக ஐபிஎல் தொடரை ரத்து செய்து விட்டு நாடு திரும்ப வேண்டும் என இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் அர்ஜுனா ரணதுங்கா வேண்டுகோள் விடுத்துள்ளார். இலங்கைக்கு முதல் முறையாக உலகக்கோப்பையை வென்று கொடுத்த இவர், இக்கட்டான நிலையில் நாடு தவிக்கும்போது இலங்கை வீரர்களுக்கு ஐபிஎல் வேண்டுமா என சாடியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் அளித்த பேட்டியில், இலங்கை விளையாட்டு துறையின் கீழ் விளையாடி வரும் வீரர்கள் அவர்களின் வேலையை காப்பாற்றிக் கொள்வதற்காக அரசாங்கத்துக்கு எதிராக நடந்து கொள்ள மறுப்பதாக ரணதுங்கா குற்றம் சாட்டியுள்ளார். ஐபிஎல் தொடரில் விளையாடும் வீரர்கள் உடனடியாக தங்களது வேலையை ஒரு வாரத்திற்கு விட்டுவிட்டு போராட்டத்திற்கு ஆதரவு கொடுக்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் சென்னை அணியில் மகேஸ் தீக்சனா, பெங்களூரு அணியில் வணிந்து ஹஸரங்கா, பஞ்சாப் அணியில் பனுக்கா ராஜபக்சா, லக்னோ அணியில் துஷ்மந்தா சமீரா, கொல்கத்தா அணியில் சாமிகா கருணாரத்னே ஆகிய 5 வீரர்கள் பங்கேற்று வருகின்றனர். இதில் ஹஸரங்கா, ராஜபக்சா ஆகியோர் மட்டும் தங்களது சமூக வலை தளங்களின் வாயிலாக மக்கள் போராட்டத்திற்கு ஆதரவாகவும் அரசாங்கத்திற்கு எதிராகவும் குரல் கொடுத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

viral video: ரெட்டிகுலேட்டட் மலைப்பாம்புக்கு அருகில் அசால்ட்டாக சாக்லேட் சாப்பிடும் குழந்தை! Manithan
