சச்சினை பழிவாங்க நினைக்கும் மும்பை அணி? - மகனுக்கு வாய்ப்பு மறுக்கப்படும் பின்னணி
மும்பை இந்தியன்ஸ் அணியில் சச்சின் டெண்டுல்கர் மகனுக்கு தொடர்ந்து வாய்ப்பு மறுக்கப்பட்டு வருவது சர்ச்சையை கிளப்பியுள்ளது.
கடந்த மார்ச் மாதம் 26 ஆம் தேதி கோலகலமாக தொடங்கிய ஐபிஎல் தொடரில் முன்னாள் சாம்பியனான மும்பை அணி நடப்பு தொடரில் இதுவரை விளையாடிய 3 போட்டிகளிலும் தோற்று ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இதனிடையே இன்றைய போட்டியில் அந்த அணி பெங்களூரு அணியுடன் மோதி வருகிறது.
கொல்கத்தா அணிக்கு எதிரான கடந்த போட்டியில் ஆல்ரவுண்டர் டேனியல் சாம்ஸ் ஒரே ஓவரில் 35 ரன்களை வாரி வழங்கியதால் இப்போட்டியில் அவர் கழட்டி விடப்பட்டார். அவருக்கு பதிலாக சச்சின் டெண்டுல்கர் மகன் அர்ஜுன் டெண்டுல்கர் அறிமுகப்படுத்த உள்ளதாக தகவல் வெளியானது. காரணம் டேனியல் சாம்ஸ் போல அர்ஜூனும் இடதுகை வேகப்பந்துவீச்சாளர் மற்றும் நன்கு பேட்டிங் செய்யக்கூடியவர்.
ஆனால் எதிர்பார்ப்பை பொய்யாக்கும் வகையில் அர்ஜுன் டெண்டுலருக்கு பதிலாக ராமந்தீப் சிங் என்ற இளம் ஆல்ரவுண்டர் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளார். இதன்மூலம் மும்பை அணியில் கடந்த சில சீசன்களாக வாய்ப்புக்காக காத்துள்ள அர்ஜுன் டெண்டுல்கருக்கு வேண்டுமென்றே ரோகித் சர்மா வாய்ப்பு தராமல் இருப்பதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
அதேசமயம் மும்பை இந்தியன்ஸ் அணி மீது ஏற்கனவே பல்வேறு குற்றச்சாட்டுக்கள் எழுந்து வரும் நிலையில் சச்சினின் தலையீட்டால் அர்ஜூன் ஐபிஎல் ஏலத்தில் எடுக்கப்பட்டதாக கூறப்பட்டது. தற்போது ஆடும் லெவனில் வாய்ப்பு வழங்கினால் வாரிசுக்கு நேரடியாக வாய்ப்பு தந்துவிட்டது போன்ற அவப்பெயர் ஏற்படும் என்பதாலும் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.