விரைவில் இந்து மக்கள் கட்சியில் சீமான் - அர்ஜுன் சம்பத் பரபரப்பு பேட்டி!
இந்து மக்கள் கட்சியில் சீமான் இணைய போவதாக அர்ஜுன் சம்பத் அறிவித்து இருப்பது தமிழக அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அர்ஜூன் சம்பத்
இந்து மக்கள் கட்சியின் நிறுவன தலைவர் அர்ஜூன் சம்பத் நெல்லையில் இன்று பத்திரிகையாளர்களை சந்தித்து கூறியதாவது: நெல்லை கல்குவாரி விபத்தில் நான்கு பேர் உயிரிழந்துள்ளனர்.
முழுக்க முழுக்க விதிமுறை மீறி குவாரி இயங்கியதால் தான், விபத்து ஏற்பட்டுள்ளது. ஊழல் நிர்வாக சீர்கேட்டினாலும் விபத்து ஏற்பட்டுள்ளது.
இந்து மக்கள் கட்சி
கல்குவாரி உரிமையாளரை கைது செய்தாலும் வழக்கை மூடி மறைக்க பார்க்கின்றனர். உண்மை குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். திமுக அரசு இந்த விஷயத்தில் மெத்தனமாக செயல்படுகிறது.
இந்த விவகாரத்தில் ஆளுங்கட்சி சபாநாயகர் சம்பந்தப்பட்டு இருப்பதாக தகவல் வருவதால் திருமாவளவன் போன்றோர் இந்த விவகாரத்தில் போராடவில்லை. கனிம வளங்கள் கொள்ளை நிறுத்தப்பட வேண்டும்.
கல்குவாரி விபத்து அறிந்தும் முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் வராததன் மூலம் நெல்லை மாவட்டத்தை அவர் புறக்கணித்து உள்ளார்.
கன்னியாகுமரியில் குமாரக்கோயில் தேரோட்டத்தில் கோயிலின் மரபுகளை மீறி கிறிஸ்தவரான அமைச்சர் மனோ தங்கராஜை வைத்து தேரை இழுக்கின்றனர். இது அராஜகம்.
எனவே தென் மாவட்டங்களில் வளர்ச்சி ஏற்படுத்த கோரி மாநாடு நடத்த இருக்கிறோம். தமிழகத்தை 2 ஆக பிரித்து தென் மாவட்டங்கள் அடங்கிய தனி மாநிலம் உருவாக்க வேண்டும்.
எட்டு ஆண்டுகளில் பிரதமர் மோடி இந்தியாவை தலைநிமிர செய்துள்ளார். அதனால் அவர் செய்தியாளர்களை சந்திக்க வேண்டிய அவசியம் இல்லை. நடிகை நயன்தாராவுக்கு எனது வாழ்த்துகள்.
திருப்பதி கோயில் விவகாரத்தில் நயன்தாரா மன்னிப்பு கேட்டுள்ளார். சீமான் கொஞ்சம் கொஞ்சமாக எங்களுடன் சேர்ந்து வருகிறார். முதலில் முருகரை ஏற்று கொண்டார். பின்னர் சிவனை ஏற்று கொண்டார்.
அப்படியே இந்தியாவையும் சீமான் ஏற்றுக் கொள்வார். விரைவில் சீமான் இந்து மக்கள் கட்சியில் சேர்ந்து விடுவார். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு மிக மோசமாக உள்ளது. திமுக மீது மக்கள் வெறுப்பில் உள்ளனர்.
வரும் 2024 தேர்தலுக்குள் ஒரே நாடு ஒரே தேர்தல் வருகிற சூழல் உள்ளது என அர்ஜுன் சம்பத் கூறினார்.