ரஜினி ஸ்டைலில் அறிக்கை விட்டு : உஷாரான அர்ஜூன மூர்த்தி
சட்டமன்ற தேர்தலில் பங்குபெற போவதில்லை என இந்திய மக்கள் முன்னேற்ற கட்சி தலைவர் அர்ஜூன மூர்த்தி அறிவித்துள்ளார். நடிகர் ரஜினி கட்சி தொடங்கிய போது அவரது கட்சிக்கு தலைமை ஒருங்கிணைப்பாளராக இருந்தவர் அர்ஜுனமூர்த்தி. ரஜினி அரசியலுக்கு வரமாட்டேன் என்று அறிவித்த நிலையில் விழிபிதுங்கி நின்ற அவர் இந்திய மக்கள் முன்னேற்ற கட்சியை சமீபத்தில் ஆரம்பித்தார்.
அதற்கு ரஜினி ஒன்றை வரியில் வாழ்த்து கூறி அறிக்கை விட்டதெல்லாம் இணையத்தில் வைரலானது நாம் அறிந்த கதை. மேலும் தங்களது கட்சி ஆட்சிக்கு வந்தால் தமிழகத்தில் 4 துணை முதல்வர்கள், கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு பேருந்து பயண அட்டையுடன் பெட்ரோல் அட்டை , 10-ம் வகுப்பு வரை விவசாயப் பாடம் கட்டாயம் என கட்சியின் தேர்தல் அறிக்கை விட்டு அதிர வைத்தவர் அர்ஜூன மூர்த்தி.
இந்நிலையில் அர்ஜூன மூர்த்தி வெளியிட்டுள்ள அறிக்கையில்: ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெறவிருக்கும் தமிழ்நாடு சட்டசபை தேர்தலில் எங்கள் கட்சியின் சார்பாக வேட்பாளர்களை நிறுத்தி பங்கேற்க வேண்டாம் என்று இந்திய மக்கள் முன்னேற்றக் கட்சி முடிவு எடுத்துள்ளது. நாங்கள் தொடர்ந்து எங்கள் கொள்கையின் அடிப்படையில் களபலத்தை வளர்த்துக் கொள்வோம் . மேலும் தமிழ்நாட்டு அரசியலில் ஒரு மாற்று சக்தியாக இருப்பதற்கான எங்கள் பணியை வலுப்படுத்துவோம் .
அனைவரின் ஆதரவோடு சற்றும் தொய்வில்லாமல் நமது மாநிலத்திற்கும், நாட்டிற்கும் ,சத்தியம் ,சமத்துவம் மற்றும் சமர்ப்பணம் ஆகிய எங்கள் கொள்கையின் அடிப்படையில் தொடர்ந்து சேவை செய்வோம்.
எங்கள் கட்சிக்கு அளித்த மகத்தான ஆதரவிற்கும் நன்றி என்று குறிப்பிட்டுள்ளார்.