தஞ்சாவூர் மாணவி லாவண்யா தற்கொலை வழக்கு - விசாரணையை தொடங்கியது சிபிஐ
தஞ்சாவூர் மாவட்டம் மைக்கேல்பட்டியில் உள்ள தூய இருதய மேல்நிலை பள்ளியில் படித்த அரியலூரை சேர்ந்த பன்னிரெண்டாம் வகுப்பு மாணவி லாவண்யா கடந்த ஜனவரி 19-ம் தேதி பூச்சி மருந்து குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
இந்த நிலையில், விடுதி காப்பாளர் மற்றும் பள்ளி நிர்வாகம் மதம் மாறும்படி கட்டாயப்படுத்தியதால் தான் மன உளைச்சல் ஏற்பட்டு மகள் தற்கொலை செய்து கொண்டதாக,
மாணவியின் தந்தை முருகானந்தம் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், மாணவி தற்கொலை வழக்கை, சிபிஐ விசாரிக்க கடந்த ஜனவரி 31-ந்தேதி உத்தரவிட்டது.
இதையடுத்து, கடந்த பிப்ரவரி 15-ம் தேதி, சென்னை சிபிஐ அதிகாரிகள், மாணவி தற்கொலை விவகாரத்தில், 18 வயதுக்கு கீழ் உள்ளவரை தற்கொலைக்கு துாண்டுதல் உட்பட நான்கு சட்டப் பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தனர்.
இந்த நிலையில், இன்று மாணவி லாவண்யா படித்த பள்ளியில், ஐஜி வித்தியா குல்கர்னி தலைமையில் 10 பேர் கொண்ட குழு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அந்த பள்ளியின் விடுதி காப்பாளர் மற்றும் மாணவ மாணவியரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.