அரியலுார் மாணவி தற்கொலை விவகாரம் - சென்னையில் பாஜகவினர் உண்ணாவிரதப் போராட்டம்
அரியலூர் மாணவி தற்கொலை செய்துகொண்ட விவகாரத்தில் தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தமிழக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தலைமையில் சென்னையில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.
தஞ்சாவூர் மாவட்ம் திருக்காட்டுப்பள்ளி அருகே உள்ள துாய இருதய மேல்நிலைப்பள்ளியில் பயின்று வந்த அரியலுாரை சேர்ந்த மாணவி தற்கொலை விவகாரம் தொடர்பாக அவரது தந்தை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
அவர் தாக்கல் செய்த மனுவில் பள்ளி நிர்வாகம் மதம் மாற வற்புறுத்தியதால் தான் தன் மகள் தற்கொலை செய்து கொண்டதாக கூறினார்.
எனவே இந்த வழக்கை சிபிசிஐடி போலீசார் விசாரணைக்கு மாற்ற வேண்டும் என கோரியிருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி மாணவியின் உடலை பெற்றுக் கொள்ள வேண்டும் எனவும் நீதிபதி முன்னிலையில் வாக்குமூலம் பெறப்பட வேண்டும் எனவும் அந்த வாக்குமூலத்தை மூடி சீலிடப்பட்ட உறையில் வைத்து நீதிமன்றத்தில் ஒப்படைக்க வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தார்.
அதன்படி கடந்த 23ம் தேதி மாணவியின் பெற்றோர் தஞ்சாவூரில் நீதிபதி பாரதி முன்பு ஆஜராகி வாக்குமூலம் அளித்தனர்.
பின்னர் மாணவியின் பெற்றோர் வாக்குமூலத்தை பெற்ற மதுரை உயர் நீதிமன்ற கிளை பிறப்பித்த உத்தரவில், மனுதாரரின் மகள் இறப்பதற்கு முன்பு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்தபோது எடுத்தாக கூறப்படும் வீடியோ உண்மையானது தானா என்பது குறித்து தடயவியல் பரிசோதனையில் உறுதிப்படுத்த வேண்டியதுள்ளது.
இந்நிலையில் மாணவி பேசும் வீடியோ ஒன்று வெளியான நிலையில் வீடியோ பதிவு செய்த நபர் ஆஜராக உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இதையடுத்து வீடியோ பதிவு செய்த முத்துவேல் என்பவர் இன்று காலை டிஎஸ்பி முன்னிலையில் ஆஜராகினார் பின்னர் அவரிடம் டிஎஸ்பி பிருந்தா விசாரணை மேற்கொண்டார்.
இந்நிலையில் மாணவியின் தற்கொலைக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தலைமையில் பாஜகவினர் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த ஆர்பாட்டத்தில் கலந்து கொண்ட பின் செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலை,மாணவியின் உயிரிழப்பு தொடர்பாக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தார்