காதல் மனைவியை அழைத்துச்செல்ல நடுரோட்டில் போராடிய கணவன்-அனுப்ப மறுத்த கள்ளக்காதலன் அடித்துக்கொலை
அரியலூரில் பிரிந்து சென்ற காதல் மனைவியை தேடிப்பிடித்து வீட்டுக்கு அழைத்து வர முற்பட்டபோது குறுக்கே நின்ற கள்ளக்காதலனை கட்டையால் அடித்துக் கொலை செய்த கணவனை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.
அரியலூர் மாவட்டம் செந்துறை அடுத்த குழுமூர் கிராமத்தில் வசித்து வருபவர் பிச்சமுத்து. அதே பகுதியைச் சேர்ந்த மாலதி என்ற பெண்ணை இவர் காதலித்து வந்துள்ளார். பல்வேறு எதிர்ப்பை மீறி 10 ஆண்டுகளுக்கு முன்னர் மாலதியை சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்டார். இத்தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். திடீரென்று இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டின் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாக பிச்சமுத்துவை பிரிந்து சென்றுவிட்டார்.
அவர் பிரிந்து சென்ற நாள் முதல், ஒவ்வொரு ஊராக சென்று மனைவியை தேடி வந்திருக்கிறார் பிச்சமுத்து. கணவனை பிரிந்து சென்ற மாலதி கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அடுத்த தேசிய நெடுஞ்சாலையில் இருக்கும் டீக்கடையில் வேலை செய்து வந்திருக்கிறார்.
அப்போது அந்த டீக்கடையில் மாஸ்டராக இருந்த வேலு என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு கள்ளத்தொடர்பில் இருந்து வந்துள்ளார். டீக்கடையில் வேலை முடித்து விட்டு வேலு வீட்டிற்கு சென்ற பின்னர் சாலையோர கடைகளின் வாசலில் காலத்தைக் கழித்து வந்திருக்கிறார் மாலதி. அந்த சமயங்களில் தொலை தூர பயணம் செல்லும் ஓட்டுநர்கள் மாலதிக்கு அறிமுகமாகியிருக்கிறார்கள்.
அவர்களுடன் சேர்ந்து மது அருந்தும் பழக்கத்திற்கு தள்ளப்பட்டிருக்கிறார். மாலதி மது அருந்திவிட்டு அவர்களுடன் உல்லாசமாக இருந்திருக்கிறார். இதை தெரிந்துகொண்ட வேலு, டீக்கடையில் பார்த்து வந்த வேலையை விட்டு விட்டு மாலதி உடனேயே ஐக்கியமாகி இருக்கிறார். மாலதியுடன் நெருக்கமாக பழகியவர்களுடன் சேர்ந்து மது அருந்தி அவர்கள் வாங்கி கொடுக்கும் சாப்பாட்டை சாப்பிட்டு கொண்டு காலத்தை கழித்துக் கொண்டு வந்திருக்கிறார்.
இந்த நிலையில் காணாமல் போன தனது மனைவி உளுந்தூர்பேட்டை அருகே தேசிய நெடுஞ்சாலையில் சுற்றித் திரிவதை கேள்விப்பட்ட பிச்சமுத்து, தன் இரண்டு மகன்களையும் அழைத்து சென்றிருக்கிறார். மாலதியை பார்த்து, எனக்காக இல்லை என்றாலும் இந்த இரு பிள்ளைகளுக்காக நீ வீட்டுக்கு வா என்று அழைத்து இருக்கிறார்.
மாலதி அதற்கு மறுப்பு தெரிவித்து வாக்குவாதம் செய்து இருக்கிறார். அப்போது அங்கு வந்த வேலு, மாலதியை அனுப்ப முடியாது என்று சொல்லி பிடிவாதம் முடித்திருக்கிறார்.
என் மனைவியை அனுப்ப முடியாது என்று சொல்வதற்கு நீ யார்? என்று கேட்டு, வேலுவை சரமாரியாக அடித்ததில், வேலு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் சடலத்தை மீட்டு, பிச்சமுத்துவை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.