கட்சி நிர்வாகியுடன் சண்டைக்கு சென்ற ப.சிதம்பரம் - அதிர்ச்சியில் தொண்டர்கள்
காங்கிரஸ் கட்சியின் ஆலோசனைக் கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரத்திற்கும் கட்சி நிர்வாகிக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
சிவகங்கை மாவட்டம் மானா மதுரை அருகேயுள்ள வெள்ளிக்குறிச்சி கிராமத்தில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ப.சிதம்பரம் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்தில் பேசிய கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் பாண்டி வேலு மானாமதுரையில் காங்கிரஸ் கட்சி வளர்ச்சியடையவில்லை என்றும் கட்சி கூட்டத்திற்கு முறையாக அழைப்பு விடுப்பதில்லை என்றும் குற்றம் சாட்டினார்.
மேலும் கட்சி நிர்வாகிகள் அனைவரையும் நீக்கி விட்டு புதிய நிர்வாகிகளை நியமிக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். பாண்டிவேலுவை அமைதி காக்கும்படி ப.சிதம்பரம் கேட்டுக்கொண்ட நிலையில் அவர் தொடர்ந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
ஒரு கட்டத்திற்கு மேல் கோபமடைந்த ப.சிதம்பரம் மேடையில் இருந்து இறங்கி வந்து, பாண்டி வேலுவிடம் மேடையில் உள்ள நாற்காலியில் அமர்ந்து கொண்டு பேசும்படி அறிவுறுத்தினார். இருப்பினும் பாண்டி வேலு நாற்காலியை தூக்கி எறிந்து ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.
அதன் பின்னர் கட்சி நிர்வாகிகள் பாண்டி வேலுவை சமாதானப்படுத்தினர்.
இதனால் தொண்டர்களிடையே பரபரப்பு ஏற்பட்டது.