தடையை மீறிய பிக்பாஸ் அர்ச்சனாவுக்கு அபராதம்! இன்ஸ்டா பதிவால் சிக்கினார்
வனத்துறையினரின் தடையை மீறி அண்ணாமலையார் மலைக்கு சென்று வந்த பிக்பாஸ் புகழ் அர்ச்சனா ரவிச்சந்திரனுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
திருவண்ணாமலையில் உலக பிரசித்தி பெற்ற அருணாச்சலேஸ்வரர் திருக்கோயில் அமைந்திருக்கிறது, இக்கோவிலின் பின்புறம் 2668 அடி உயரத்தில் அண்ணாமலையார் மலை உள்ளது, இம்மலையை சுற்றி கிரிவலம் செல்ல பௌர்ணமி நாட்களில் மட்டுமே அனுமதி உண்டு, மற்ற நாட்களில் வனத்துறையினர் தடை விதித்துள்ளனர்.

வனத்துறையினரின் அனுமதி பெறாமல் சின்னத்திரை நடிகை அர்ச்சனா ரவிச்சந்திரன் மலை உச்சி வரை சென்றுவந்துள்ளார், இந்த புகைப்படங்களை அவர் இன்ஸ்டாகிராமல் வெளியிட வைரலானது.

அந்த பதிவில், மலை ஏறி இறங்க சிரமம் அடைந்ததாகவும், மாலை நேரத்தில் இருள் சூழ்ந்துவிட்டதாகவும் தெரிவித்திருந்தார். மேலும் டிரெக்கிங் செல்வதாக இருந்தால் காலையிலேயே ஏறி, மாலைக்குள் இறங்க திட்டமிட்டுக்கொள்ளுங்கள் என்றும் அவர் அந்த பதிவில் குறிப்பிட்டு இருந்தார்.

இந்த பதிவு வைரலானதை தொடர்ந்து தடையை மீறி சென்றதற்காக வனத்துறையினர் விசாரணையை தொடங்கினர், முடிவில், அனுமதியின்றி மலையேறிய குற்றத்திற்காக அர்ச்சனாவுக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
