அரக்கோணம் இரட்டைக் கொலை.. மூன்று மாதங்களுக்குள் குற்றவாளிகளை தண்டிக்க வேண்டும் - கே.பாலகிருஷ்ணன்
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தில் இரு சமூகத்தினர் இடையே ஏற்பட்டதால் தேர்தல் மோதலால் நிகழ்ந்த இரட்டைக் கொலை சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது. இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி உரிய தண்டனை பெற்றுத்தர வேண்டும் என தமிழகத்தின் அனைத்து அரசியல் கட்சிகளும் தெரிவித்துள்ளன.
இது தொடர்பான வழக்கை மூன்று மாத காலத்திற்குள் முடிவுக்கு கொண்டு வந்தால் குற்றவாளிகள் தப்பிக்க முடியாது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலாகிருஷ்ணன் தெரிவித்தார்.
அரக்கோணம் அடுத்த சோகனூரில் கடந்த 7-ம் தேதி இருபிரினர் மோதலில் ஏற்பட்ட இரட்டை கொலையில் உயிரிழந்த சோகனூர் பகுதியை சேர்ந்த அர்சுனன், செம்பேடு பகுதியை சேர்ந்த சூர்யா ஆகியோரின் உடலுக்கு இன்று நேரில் அஞ்சலி செலுத்தி, உயிரிழந்தவர்கள் குடும்பத்தாருக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலசெயலாளர் கே.பாலாகிருஷ்ணன் ஆறுதல் கூறினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பாலகிருஷ்ணன், “3 மாத காலத்திற்குள் வழக்கை முடிவுக்கு கொண்டு வந்தால் குற்றவாளிகள் தப்பிக்க முடியாது. ஆனால் காவல் துறையும் குற்றவாளிகளும் சேர்ந்துக்கொண்டு வழக்குகளை பல ஆண்டுகள் நீடித்த காரணத்தினாலே குற்றவாளிகள் தப்பித்துவிடுகிறார்கள். குற்றவாளிகள் தப்பிப்பதே சாதிய வன்மம் நடக்க காரணமாக அமைந்துவிடுகிறது.
எனவே 3 மாதத்திற்குள் இவ்வழக்கை முடித்து குற்றவாளிகளுக்கு மிக அதிகபட்ச தண்டனையை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும். உயிரிழந்த குடும்பத்தாருக்கு எங்களது ஆழ்ந்த வருத்தத்தை தெரிவித்துக்கொள்கிறோம். அந்த குடும்பத்தை காக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இரண்டு குடும்பத்திற்க்கும் தலா 50 லட்சம் நிவாரணமும், 2 பெண்களுக்கு அரசு வேலையும் வழங்க வேண்டும்.
தமிழகத்தில் இருக்கக்கூடிய அனைத்து ஜனநாயக சக்திகளும் இதுபோன்ற சாதிய வன்முறைகளை தடுத்து நிறுத்துவதற்க்கு இணைந்து பணியாற்ற முன்வர வேண்டும்” என்றார்.