எளிமையாக நடந்த ஏ.ஆர்.ரஹ்மான் மகள் திருமணம்... மாப்பிள்ளை இவர் தானா?

A R Rahman
By Petchi Avudaiappan May 06, 2022 04:50 PM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in பிரபலங்கள்
Report

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானின் மூத்த மகளுக்கு எளிய முறையில் இன்று திருமணம் நடைபெற்று முடிந்துள்ள நிலையில் வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. 

இந்திய சினிமாவின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவரான இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் தற்போது இவர் மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன், பார்த்திபன் இயக்கும் இரவின் நிழல், விக்ரம் நடிக்கும் கோப்ரா, சிவகார்த்திகேயனின் அயலான் போன்ற படங்களுக்கு இசையமைத்து வருகிறார். ஏ.ஆர்.ரஹ்மான் - சாய்ரா பானு தம்பதிக்கு ஏ.ஆர்.ஆர்.அமீன் என்ற மகனும், கதீஜா, ரெஹிமா என இரு மகள்களும் உள்ளனர்.

இதில் மூத்த மகளான கதீஜா ரஹ்மானுக்கும் ஆடியோ இன்ஜினியர் ரியாஸ்தீன் ஷேக் முகமதுவுக்கும் கடந்த டிசம்பர் 29 அன்று திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. இதனை ஏ.ஆர்.ரகுமானின் மகள் கதீஜா தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். 

ஆடியோ இன்ஜினியரான ரியாஸ்தீன், பிரபல இசையமைப்பாளர்களிடம் பணி புரிந்துள்ளார். குறிப்பாக ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்த ’தமாஷா’ என்ற இந்தி திரைப்படத்திலும் அவர் பணிபுரிந்துள்ளது குறிப்பிடத்தக்கது. அதோடு ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லைவ் சவுண்ட் இன்ஜினியராகவும் பணியாற்றி வருகிறார். ஆக தன்னுடன் வேலைப்பார்த்த ரியாஸ்தீனையே ரஹ்மான் தனக்கு மருமகனாக்கி இருந்தது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருந்தது. 

இந்நிலையில் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நட்பு வட்டாரங்கள் முன்னிலையில் இருவருக்கும் நேற்று மாலை சென்னையில் எளிமையாக திருமணம் நடைபெற்றது. மகளின் திருமண புகைப்படத்தை, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள ஏ.ஆர்.ரஹ்மான், “மணமக்களை எல்லாம் வல்ல இறைவன் ஆசீர்வதிப்பாராக. உங்கள் அனைவரின் வாழ்த்துக்களும் முன்கூட்டியே நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.

புகைப்படத்தில் மணமக்களுடன் ஏ.ஆர். ரஹ்மான், அவரது மனைவி சாய்ரா பானு, இளைய மகள் ரஹீமா, மகன் அமீன் ஆகியோருடன், ஏ.ஆர். ரஹ்மானின் தாயார் புகைப்படமும் அருகில் உள்ளவாறு பகிர்ந்த புகைப்படம் இணையத்தில் கவனம் பெற்றுள்ளது. கதீஜா தனது இன்ஸ்டாகிராம் பதிவில், “என் வாழ்வில் நான் மிகவும் எதிர்பார்த்து காத்திருந்த நாள் இது. என்னவரை கரம் பிடித்தேன்” என பதிவிட்டுள்ளார்.