இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானின் பிறந்தநாள் இன்று - குவியும் வாழ்த்துக்கள்

arrahman ஏ.ஆர்.ரஹ்மான் ஏ.ஆர்.ரஹ்மான் பிறந்தநாள் இன்று
By Petchi Avudaiappan Jan 06, 2022 12:23 AM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in பிரபலங்கள்
Report

ஏழு ஸ்வரத்தை தாண்டி எட்டாவது ஸ்வரமாகவே திகழும் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானின் பிறந்தநாளை  உலகமெங்கும் உள்ள அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். 

 1967 ஆம் ஆண்டு ஜனவரி 6ம் தேதி திலீப் குமாராக பிறந்தவர். இசை ரஹ்மானின் ரத்தத்தில் இருந்தே பிறந்தது என்று சொல்லலாம். ஏ.ஆர். ரஹ்மானின் அப்பா ஆர்.கே. சேகர் எனும் ராஜகோபால குலசேகரனும் இசையமைப்பாளர் தான். தமிழ் மற்றும் மலையாளம் என மொத்தம் 50 படங்களுக்கு இசை அமைத்துள்ளார். பல படங்களுக்கு இசையமைப்பதில் உதவி செய்துள்ளார். 

இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானின் பிறந்தநாள் இன்று - குவியும் வாழ்த்துக்கள் | Ar Rahman Celebrates His 55Th Birthday

4 வயதிலேயே இசையை கற்றுக் கொள்ள ஆரம்பித்த ஏ.ஆர். ரஹ்மான் மாஸ்டர் தன்ராஜ் என்பவரிடம் இசையை பயின்றார். பின்னர் 11 வயதிலேயே ஆர்கெஸ்ட்ராவில் இசையமைக்கத் தொடங்கி விட்டார். எம்.எஸ். விஸ்வநாதன், விஜய பாஸ்கர், இளையராஜா உள்ளிட்ட இசை ஜாம்பவான்களிடம் உதவியாளராக பணியாற்றி வந்த ரஹ்மான் இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான ரோஜா படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார். 

தொடர்ந்து இசையில் புதிய புரட்சியை நடத்திய ஏ.ஆர். ரஹ்மான். காதல் பாடல்கள் என்றாலும், கானா பாடல்கள் என்றாலும், ஏ.ஆர். ரஹ்மான் கிளாஸ் மற்றும் மாஸ் கலந்து இசையமைத்து கொடுத்த விதம் வித்தியாசமாகவும், அதேசமயம் அவருக்கென இந்தியா முழுவதும் தனி ரசிகர் பட்டாளத்தையே கொண்டு சேர்த்தது. 

ஒரு ஆஸ்கரையாவது இந்தியர்கள் பெற்று விட மாட்டார்களா? இந்திய படம் ஆஸ்கர் போட்டியில் இறுதி சுற்றுக்காவது சென்று விடாதா? என ஒவ்வொரு ஆண்டும் கனவு கண்டு கொண்டிருந்த நிலையில் 2008 ஆம் ஆண்டு வெளியான ஸ்லம்டாக் மில்லியனர் எனும் படத்திற்காக 2 ஆஸ்கர் விருதுகளை வென்று இந்தியாவின் ஆஸ்கர் நாயகனாக மாறினார் ஏ.ஆர். ரஹ்மான். 

ஒவ்வொரு பாடல்களிலும் புதுவிதமான இசையை பயன்படுத்துவதில் கைதேர்ந்தவரான ஏ.ஆர்.ரஹ்மான் தற்போது விக்ரமின் கோப்ரா, இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் பொன்னியின் செல்வன் சிம்புவின் வெந்து தணிந்தது காடு, சிவகார்த்திகேயனின் அயலான் என  பல படங்களில் பணியாற்றி வருகிறார். 

தனுஷின் இந்தி படமான அட்ரங்கி ரேவின் இறுதியில் எ ஃபிலிம் பை ஏ.ஆர். ரஹ்மான் வருவதை பார்த்து ரசிகர்கள் கொண்டாட்டத்தில் மிதந்தனர். இசையை தாண்டி இயக்கம், தயாரிப்பு உள்ளிட்ட பணிகளிலும் கவனம் செலுத்தி வரும் ஏ.ஆர். ரஹ்மான் இன்னும் பல சாதனைகளை படைக்க வேண்டும் என ரசிகர்கள் சமூகவலைத்தளம் மூலம் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.