முட்டாள் தினம் எப்படி உருவானது தெரியுமா? சுவாரஸ்ய தகவல் இதோ..
ஏப்ரல் முதல் நாள் முட்டாள்கள் தினமாகக் கொண்டாடப்படுகிறது.
ஏப்ரல் ஃபூல்
முட்டாள்கள் தினம் 'ஏப்ரல் ஃபூல்' பல நூற்றாண்டுகளாக பல்வேறு கலாச்சாரங்களால் கொண்டாடப்படுகிறது. முதலில் பிரான்ஸ் மற்றும் சில ஐரோப்பிய நாடுகளில் மட்டுமே கொண்டாடப்பட்டது.
இன்றைய தினம், எப்படி உருவானது? அதன் வரலாற்றுப் பின்னணியில் பல கதைகள் உண்டு. 1500-களில் ஐரோப்பியர்கள் கடைப்பிடித்த ஒரு பழக்கமாக ஏப்ரல் 1 கூறப்படுகிறது. அப்போது, அந்த நாளின் பெயர் ஏப்ரல் மீன்கள் தினம்.
ஏப்ரல் மாதத் தொடக்கத்தில் ஃபிரான்ஸ்ஸில் உள்ள ஆறுகளிலும் நீரோடைகளிலும் நிறைய மீன்கள் இருக்குமாம். அதனால் அந்தச் சமயத்தில் மீன்பிடிப்பது மிகவும் சுலபம். ஆகையால் மீன்கள் ஏமாறும் தினமாக ஏப்ரல் 1 கருதப்பட்டது.
எதனால் கொண்டாட்டம்?
காலப்போக்கில் மனிதர்களை ஏமாற்றும் தினமாக அது மாற்றம் கண்டதாம். இது பிரான்ஸிலிருந்து இங்கிலாந்துக்கும் அங்கிருந்து அமெரிக்காவுக்கும் 'ஏப்ரல் பூல்' விரிந்து பரவி இருக்கிறது.
19 ஆம் நூற்றாண்டில் ஆங்கிலேயர்களால் இந்தியாவில் தொடங்கப்பட்டது. மக்கள் தங்கள் நண்பர்கள், நெருங்கியவர்கள் அல்லது குடும்ப உறுப்பினர்களை ஏமாற்றி இந்த நாளை கொண்டாடுகிறார்கள்.