தமிழக ஆளுநராக ஆர்.என்.ரவி நியமிக்கப்பட்டிருப்பதில் உள்நோக்கம் உள்ளது: கே.எஸ்.அழகிரி

governor tamilnadu rnravi
By Irumporai Sep 10, 2021 10:38 AM GMT
Report

ஆளுநர் ஆர்.என்.ரவியை தமிழகத்தில் ஜனநாயகப் படுகொலை நடத்துவதற்கு ஆயுதமாகப் பயன்படுத்த மோடி அரசு முயன்றால் போராட்டம் வெடிக்கும் என தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தமிழகத்தின் புதிய ஆளுநராக ஆர்.என் ரவி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.இந்த நிலையில்  கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் :

முழுக்க, முழுக்க காவல் துறை பின்புலம் கொண்ட ஆர்.என்.ரவியை நாகாலாந்து ஆளுநராக மத்திய அரசு நியமித்தது. இந்நிலையில், அவர் தமிழக ஆளுநராக நியமிக்கப்பட்டிருப்பதில் உள்நோக்கம் இருப்பதாக சந்தேகம் எழுந்துள்ளது.

எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் இடையூறு செய்வதற்காகவே இது போன்ற நியமனங்களை மத்திய அரசு கடந்த காலங்களில் செய்திருக்கிறது. இதனைக் கண்கூடாகக் கடந்த சில ஆண்டுகளாகப் பார்த்து வருகிறோம்.

முன்னாள் காவல் துறை அதிகாரியான கிரன் பேடியை புதுச்சேரி ஆளுநராக நியமித்து, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு எதிராக நடத்திய ஜனநாயக விரோத நடவடிக்கைகளை நாடே பார்த்து நகைத்தது. விளம்பரமே கூடாது என்று செயல்படும், நேர்மையான ஆட்சியை தந்து கொண்டிருக்கும் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு இடையூறு செய்யும் வகையிலேயே ஆர்.என்.ரவியை மோடி அரசு ஆளுநராக நியமித்திருக்கிறதோ? என்று சந்தேகப்படுகிறேன்.

புதிதாக நியமிக்கப்பட்டுள்ள ஆளுநர் ஆர்.என்.ரவியை, தமிழகத்தில் ஜனநாயகப் படுகொலை நடத்துவதற்கு ஆயுதமாகப் பயன்படுத்த மோடி அரசு முயன்றால், மக்களைத் திரட்டி ஜனநாயக சக்திகள் போராட வேண்டிய சூழல் உருவாகும் என எச்சரிக்க விரும்புகின்றேன் என்று தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்