அறுபடை வீடுகளுக்கு இலவச சுற்றுலா; இன்று முதல் விண்ணப்பிக்கலாம் - முழு விவரம்!
முருகனின் அறுபடை வீட்டிற்கு இலவச ஆன்மிக சுற்றுலா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அறுபடை வீடு
இந்து சமய அறிநலைத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு ஓய்வுபெற்ற அர்ச்சகர்கள் மற்றும் பணியாளர்களுக்கு பொங்கல் கொடை வழங்கும் திட்டத்தைத் தொடங்கி வைத்தார். தொடர்ந்து,அறுபடை வீடுகளுக்கு 'இலவச ஆன்மிக சுற்றுலா" குறித்து ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
அதன்பின், செய்தியாளர்களிடம் பேசிய சேகர் பாபு, முதலமைச்சர் வழிகாட்டுதலின்படி அறுபடை வீடுகளாக உள்ள திருப்பரங்குன்றம், திருச்செந்தூர், பழனி, சுவாமிமலை, திருத்தணி, பழமுதிர்சோலை ஆகிய திருத்தலங்களுக்கு 200 பக்தர்களை ஆண்டிற்கு 5 முறை அதாவது 1,000 பக்தர்களை கட்டணமில்லாமல் ஆன்மிக சுற்றுலா அழைத்து செல்ல உள்ளோம்.
இலவச சுற்றுலா
அதன்படி, அறுபடை வீடுகளுக்குக்கான முதற்கட்ட ஆன்மிகப் பயணம் வருகின்ற 28 ஆம் தேதி அன்று தொடங்குகிறது. இதற்கான விண்ணப்பங்களை நாளை முதல் துறையின் இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்கலாம். தகுதியுடைய 200 விண்ணப்பதாரர்கள் முதற்கட்ட பயணத்தில் அழைத்துச் செல்லப்படுவர்கள்.
ஏனைய தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் அடுத்தடுத்த ஆன்மிக பயணங்களில் அழைத்து செல்ல முன்னுரிமை வழங்கப்படும். 60 வயதுக்கு மேல் 70 வயதுக்குள் இருப்பவர்கள் இந்த ஆன்மீக பயணத்திற்கு விண்ணப்பிக்கலாம். இந்த ஆண்டு தை பூசம் வெகு விமரிசையாக நடப்பதற்கு சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
தை பூசம் 10 நாட்களுக்கு கொண்டாடப்படும். அந்த பத்து நாட்களும் பழனியில் தினமும் 10,000 பேர் அன்னதானம் பெரும் திட்டத்தை செயல்படுத்த உள்ளோம் எனத் தெரிவித்துள்ளார்.