குலுங்கிய அடுக்குமாடி குடியிருப்பு...அலறிய பொதுமக்கள் - சென்னையில் அதிகாலையில் பரபரப்பு
சென்னை கொரட்டூர் அரசு அடுக்குமாடி குடியிருப்பில் திடீரென அதிர்வு ஏற்பட்டதால் மெக்கள் அலறி அடித்து வெளியே ஓடி வந்து ரோட்டில் தஞ்சம் அடைந்தனர்.
குலுங்கிய அடுக்குமாடி குடியிருப்பு
சென்னை கொரட்டூரில் உள்ள தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்திற்கு சொந்தமான கோல்டன் பிளாக் என்ற அடுக்குமாடி குடியிருப்பு ஒன்று அமைந்துள்ளது.
9 தளங்களை கொண்டுள்ள இந்த அடுக்குமாடி குடியிருப்பு பகுதியில் சுமார் 200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.
இந்த நிலையில் இன்று அதிகாலை திடீரென கட்டிடம் குலுங்குவது போல் உணரப்பட்டதால் அங்கு வசித்த மக்கள் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்துள்ளனர்.
சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் மேற்கொண்ட ஆய்வில் எந்தவித நில அதிர்வும் அதிகாரப்பூர்வமாக பதிவாகவில்லை என தெரிவித்தனர்.
உயிருக்கு உத்தரவாதம் இல்லை
2019 ஆம் ஆண்டு தமிழக வீட்டுவசதி வாரிய திட்டத்தின் கீழ் இந்த குடியிருப்பு வழங்கப்பட்டதாகவும், சுமார் 200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருவதாகவும்,
கட்டிடம் வழங்கப்பட்ட இரண்டு மாதங்களிலேயே விரிசல் ஏற்பட்டதாகவும், இது குறித்து உயர் அதிகாரிகளிடம் முறையிட்டும் எந்த நடவடிக்கையும் இல்லை பின்னர் போராட்டம் நடத்தியதால் அரசு பல்கலைக்கழக அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு சரி செய்யப்பட்டதாகவும்,
உயிருக்கு உத்தரவாதம் இல்லாத இந்த குடியிருப்பில் வசிப்பது கேள்விக்குறியாக உள்ளதாகவும், அரசு தலையிட்டு இதற்கு உடனடியாக தீர்வு காண வேண்டும் என குடியிருப்பு வாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.