அதிமுகவில் இருந்து அன்வர்ராஜா அதிரடி நீக்கம் : ஓபிஎஸ் - இபிஎஸ் நடவடிக்கை

admk anwarraja
By Petchi Avudaiappan Nov 30, 2021 06:49 PM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in தமிழ்நாடு
Report

அதிமுகவில் இருந்து முன்னாள் அமைச்சர் அன்வர் ராஜா நீக்கம் செய்யப்படுவதாக கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

சட்டமன்ற, உள்ளாட்சி தேர்தல் தோல்விகளைத் தொடர்ந்து அதிமுகவின் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் கடந்த வாரம் நடைபெற்றது. கூட்டத்தின்போது, சசிகலாவை கட்சியில் சேர்க்க வேண்டும் என்று வலியுறுத்தியதுடன், எடப்பாடி பழனிச்சாமியை அன்வர் ராஜா விமர்சித்துப் பேசியதாக கூறப்படுகிறது.

இதனால் முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் அன்வர் ராஜாவை தாக்க முற்பட்டதாக வெளியான தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக ஊடகம் ஒன்றிற்கு அன்வர் ராஜா அளித்த பேட்டியில் தான் எடப்பாடி பழனிசாமியை ஒருமையில் பேசியது உண்மைதான் என்று கூறியிருந்தார். இந்நிலையில், அன்வர் ராஜாவை அதிமுகவில் இருந்து நீக்கம் செய்து கட்சி தலைமை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

அதில்  கழகத்தின் கொள்கை- குறிக்கோள்களுக்கும், கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும் கழகத்தின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில் செயல்பட்டதாலும் கழக கட்டுப்பாட்டை மீறி கட்சி நடவடிக்கைகள் குறித்து கழக தலைமையின் முடிவுக்கு மாறான கருத்துகளை தெரிவித்து கழகத்திற்கு களங்கமும் அவப் பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்டதாலும் அன்வர் ராஜா கழகத்தின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.