சிங்காநல்லூர் அதிமுக எம்.எல்.ஏ. கே.ஆர்.ஜெயராம் வீட்டிலும் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை
கோவை சிங்கநல்லூர் அதிமுக எம்.எல்.ஏ கே.ஆர்.ஜெயராம் வீட்டிலும் லஞ்ச ஒழிப்பு துறை சோதனை நடைபெற்று வருகிறது. அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி வீடு ,நகை கடை ,அலுவலகம், உறவினர்களின் வீடு , உதவியாளர் வீடு என ஆறு மாவட்டங்களில் மொத்தம் 58 இடங்களில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர் .
கோவை ,சென்னை, சேலம் ,திருப்பத்தூர், நாமக்கல், கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் தற்போது சோதனை நடைபெற்று வருகிறது. வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக எஸ்.பி. வேலுமணி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஏற்கனவே கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் எஸ்.பி. வேலுமணி வீடு அலுவலகம் உள்ளிட்ட 60 இடங்களில் சோதனை நடைபெற்ற நிலையில், தற்போது மீண்டும் சோதனை நடைபெற்று வருகிறது. கோவை மைல்கல் பகுதியில் உள்ள அவரது வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை நடத்துவதுடன் அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

எஸ்.பி. வேலுமணி வீட்டில் சோதனை என்ற செய்தி வெளியானவுடன் அதிமுக தொண்டர்கள் வேலுமணி வீட்டு முன்பு குவியத் தொடங்கினர். இந்தநிலையில் சிங்காநல்லூர் அதிமுக எம்.எல்.ஏ. கே.ஆர்.ஜெயராம் வீட்டிலும் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.
அதேபோல் எஸ்.பி.வேலுமணிக்கின் உறவினருக்கு சொந்தமான திருப்பூர் குமரன் சாலையில் உள்ள நகைக்கடையில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை செய்து வருகின்றனர்.
இதனிடையே முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வீட்டிற்கு வந்த வால்பாறை எம்.எல்.ஏ அமுல் கந்தசாமி தன்னை வீட்டிற்குள் அனுமதிக்கக் கோரி காவல்துறையினருடன் வாக்குவாதம் செய்தார். இதை தொடர்ந்து அதிமுகவினரும் முழக்கம் எழுப்பி வருவதால் அங்கு பரபரப்பு நிலவி வருகிறது.