கொரோனா தடுப்பூசி குறித்து சர்ச்சைப் பேச்சு- முன்ஜாமீன் கோரி மன்சூர் அலிகான் மனு தாக்கல்
கடந்த 15ம் தேதி நடிகர் விவேக் ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் செய்தியாளர்கள் முன்னிலையில், கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டார். அப்போது, என்னைபோல் நீங்கள் அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்று மக்களுக்கு விழப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக பேசினார்.
ஆனால், மறுநாளே நடிகர் விவேக்கிற்கு மாரடைப்பு ஏற்பட்டு வடபழனி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி கடந்த 17ம் தேதி விவேக் உயிரிழந்தார்.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய மன்சூர் அலிகான், கொரோனா தடுப்பூசி குறித்து சில கருத்துகளை தெரிவித்தார். இவரின் கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. சமூகவலைத்தளங்களில் மன்சூர் அலிகான் பேட்டி வைரலானது.
இவரின் கருத்துகள் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் அளித்த புகாரின் பேரில் மன்சூர் அலிகான் மீது வடபழனி போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.
இந்நிலையில், வழக்கில் தன்னை கைது செய்வதில் இருந்து விலக்கு பெற முன்ஜாமீன் கோரி மன்சூர் அலிகான் மனு தாக்கல் செய்துள்ளார்.
கொரோனா தடுப்பூசி பற்றி உள்நோக்கத்துடன் கருத்து எதுவும் கூறவில்லை. தடுப்பூசி செலுத்துவதை கட்டாயப்படுத்தக் கூடாது என்று தான் கூறினேன் என்று மன்சூர் அலிகான் தரப்பில் விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.