வேதாந்தா மீது குற்றவியல் நடவடிக்கை வேண்டும் - ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் இயக்கம் கோரிக்கை
ஸ்டெர்லைட் நிர்வாகத்தின் மீது வேதாந்தா குழுமத்தின் மீதும் குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் இயக்கம் புதிதாக பொறுப்பேற்றுள்ள திமுக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது.
ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கடந்த 2018-ம் ஆண்டு மே 22-ம் தேதி நடைபெற்ற போராட்டத்தில் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டு 13 பேர் கொல்லப்பட்டனர். இதில் 17 வயது சிறுமியான ஸ்நோலினும் அடக்கம்.
இந்த நிலையில் ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூடு சம்பவத்தின் மூன்றாவது ஆண்டை ஒட்டி இணைய வழியில் போராட்டம் நடத்தப்போவதாக ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் இயக்கம் தெரிவித்துள்ளது.
மேலும் பல்வேறு கோரிக்கை திமுக அரசுக்கு முன்வைத்துள்ளது. அதில் புதிய அரசு தூத்துக்குடியில் இயல்பு நிலை கொண்டு வர எல்லா நடவடிக்கைகளும் எடுக்கும் என எங்களுக்கு முழு நம்பிக்கை உள்ளது எனத் தெரிவித்துள்ளனர்.
மேலும், “வேதாந்தா நிறுவனம் நிரந்தரமாக தூத்துகுடியை விட்டு வெளியேற வேண்டும். சுற்றுச்சூழல் சட்டங்கள் பலவற்றை மீறியதற்கும், பித்தலாட்டம் பல நிகழ்த்தியிருக்கும் வேதாந்தாவின் நிர்வாகிகள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
துப்பாக்கிச்சூட்டில் தொடர்புடைய காவல்துறை அதிகாரிகள் மீது எப்.ஐ.ஆர் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் மீது போடப்பட்ட வழக்குகள் திரும்பப்பட வேண்டும்.
மனித உரிமைகள் ஆணையம், நீதிபதி அருணா ஜெகதீசன் விசாரணை ஆணையத்தின் விசாரணையை விரைந்து முடிக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளனர்.