தென்னாப்பிரிக்க அணியின் முக்கிய வீரர் விலகல் - இந்திய அணிக்கு நிம்மதி
இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இருந்து முக்கிய வீரர் விலகியுள்ளதால் தென்னாப்பிரிக்கா அணிக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.
தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 3 டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடரில் விளையாட உள்ளது. முதல் டெஸ்ட் போட்டி டிசம்பர் 26 ஆம் தேதி தொடங்கவுள்ளது. இந்த போட்டிக்கான அறிவிப்பு வெளியானதிலிருந்து அடுத்தடுத்து பல சிக்கல்களை சந்தித்தது.
ஏற்கனவே இந்த தொடரில் இடம் பெற்றிருந்த இந்திய வீரர்களான ரோஹித் சர்மா, சுப்மன் கில், ரவீந்திர ஜடேஜா ஆகியோர் காயம் காரணமாக இந்த தொடரில் இருந்து வெளியேறியுள்ளனர்.
இந்நிலையில் தற்போது மற்றொரு வீரராக தென்னாப்பிரிக்க அணியை சேர்ந்த முன்னணி நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் ஆன்ரிச் நோர்கியா இந்த தொடரில் இருந்து காயம் காரணமாக வெளியேறியுள்ளார் என்ற அதிகாரபூர்வ தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 2019ஆம் ஆண்டு டெஸ்ட் போட்டிகளில் அறிமுகமான இவர் 12 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 47 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார்.
அதுமட்டுமின்றி மணிக்கு 150 கிலோ மீட்டர் வேகத்தில் நிலையாக பந்துவீசி பேட்ஸ்மேன்களுக்கு எதிராக தனது வேகத்தின் மூலம் பயத்தை காட்டிவந்த இவர் சொந்த மண்ணில் இன்னும் சிறப்பாக பந்துவீசக்கூடியவர். இந்நிலையில் தற்போது அவர் காயம் காரணமாக விலகியிருப்பது இந்திய அணிக்கு ஒரு கூடுதல் பலத்தை கொடுத்துள்ளது.