வசமான சிக்கலில் மாட்டிய ரஷ்யா - சைபர் தாக்குதலை தொடங்கியது மிகப்பெரிய ஹேக்கர்ஸ் குழு
உலகின் மிகப்பெரிய ஹேக்கர்ஸ் குழு ரஷ்யாவுக்கு எதிராக மிகப்பெரிய சைபர் தாக்குதலை தொடங்கியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சோவியத் யூனியனில் அங்கம் வகித்த உக்ரைன், தற்போது நேட்டோ கூட்டமைப்புடன் சேர்வதற்கான அனைத்து பணிகளையும் செய்து வருகிறது. இதனால் தங்கள் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படலாம் என கூறி ரஷ்யா உக்ரைன் மீது போர் தொடுத்துள்ளது.
தொடர்ந்து 3வது நாளாக நடைபெறும் இந்த வான்வழி, கடல்வழி மற்றும் தரைவழி என மும்முனை தாக்குதலால் உக்ரைன் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. இருநாட்டு பாதுகாப்பு வீரர்களும், அப்பாவி பொதுமக்களும் இந்த தாக்குதலில் கொல்லப்பட்டனர்.
இதனிடையே ரஷ்யாவுக்கு எதிராக உலகின் மிகப்பெரிய அடையாளம் தெரியாத ஹேக்கிங் குழு களமிறங்கியுள்ளது. அனானமஸ் என்று பெயர் கொண்ட இந்த ஹேக்கிங் குழு உலகம் முழுவதும் உள்ள ஹேக்கர்களின் வலைதள அமைப்பாக செயல்பட்டு வரும் நிலையில் ரஷ்யா மீது இணையதள தாக்குதலை தொடங்கப்பட்டுள்ளது.
ரஷ்யாவின் அரசு இணையதள பக்கங்கள், ஊடகங்கள், நிறுவனங்கள் என அனைத்து அமைப்புகள் மீதும் இந்த அமைப்பு சைபர் தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் அந்நாட்டின் பாதுகாப்பு அமைச்சகத்தின் தகவல்களை அனானமஸ் ஹேக்கிங் அமைப்பு கசியவிட்டுள்ளது. இதனால் ரஷ்ய அரசின் பல்வேறு இணையதள பக்கங்கள் முடக்கப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.