என்னை முதல்வர் வேட்பாளராக அறிவித்ததற்கு நன்றி - கமல்ஹாசன்

actor political tamilnadu
By Jon Mar 03, 2021 03:40 PM GMT
Report

தமிழகத்தில் தேர்தல் அறிவிப்பு வெளியானதை அடுத்து, அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. பல்வேறு கட்சிகளிடையே கூட்டணி, தொகுதி உடன்பாடு உள்ளிட்ட பேச்சுவார்த்தைகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன. இந்நிலையில் திமுக, அதிமுக தலைமையிலான கூட்டணி தவிர்த்து கமல்ஹாசன் தலைமையில் மூன்றாவது அணி உருவாகியுள்ளது.

இதில் மக்கள் நீதி மய்யம், சமத்துவ மக்கள் கட்சி மற்றும் இந்திய ஜனநாயக கட்சி ஆகியவை இடம்பெற்றுள்ளன. மேலும் பல கட்சிகளுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடப்பதாகவும் கூறப்பட்டு வருகிறது. இதற்கிடையே இன்று புதுக்கோட்டையில் நடைபெற்ற சமத்துவ மக்கள் கட்சியின் 6-வது பொதுக்குழுக் கூட்டத்தில், மக்கள் நீதி மய்யத்துடன் கூட்டணி அமைப்பதாகவும் முதல்வர் வேட்பாளராகக் கமல்ஹாசனை ஏற்றுக் கொள்வதாகவும் அக்கட்சியின் பொதுச் செயலாளர் சரத்குமார் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் இதுகுறித்துத் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன், ''மக்கள் விரும்பும் கூட்டணியின் முதல்வர் வேட்பாளராக என்னை முன்மொழிந்த சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர், அன்புச் சகோதரர் சரத்குமாருக்கு என் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

மக்கள் நலனில் அக்கறையுள்ளவர்கள் எதிர் வரும் நாட்களில் எம்மோடு கைகோர்ப்பார்கள். இம்முறை வெல்வது தமிழகமாக இருக்கட்டும்'' என்று தெரிவித்துள்ளார்.