தமிழகத்தில் உள்ள ஈழத்தமிழர் தொடர்பில் தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையில் விசேட அறிவிப்புக்கள்

tamil election dmk aiadmk eealam
By Jon Mar 14, 2021 03:14 PM GMT
Report

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், திமுக நேற்று தனது வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது. இந்த நிலையில் இன்று காலை தி.மு.க தலைவர் ஸடாலின் தேர்தல் அறிக்கையை வெளியிட்டார். முன்னதாக கருணாநிதி நினைவிடத்தில் தேர்தல் அறிக்கையை வைத்து மரியாதை செய்தார்.

அறிவிப்பு நிகழ்ச்சியில் பேசிய ஸ்டாலின், தேர்தல் அறிக்கையில் 500 திட்டங்கள் இருக்கிறது. அதில் முக்கியமானவற்றை அறிவிக்கிறோம் என்றார். இதில் இலங்கையில் இடம்பெற்ற இனப்படுகொலைக்கு சர்வதேச விசாரணையை முன்னெடுப்பதற்கும், தமிழர்களுக்கான நிரந்தரத் தீர்வை வழங்கும்பொருட்டு பொது வாக்கெடுப்பை நடத்துவதற்கும் மத்திய அரசை வலியுறுத்தவுள்ளதாக தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இந்தத் தேர்தல் அறிக்கையில் ஈழத் தமிழர் நல்வாழ்வு என்ற தலைப்பின் கீழ் நான்கு விடயங்களைச் செயற்படுத்துவது தொடர்பாக உறுதியளிக்கப்பட்டுள்ளது. அதில், இலங்கையில் நடைபெற்ற மனித உரிமை மீறல்கள், போர்க்குற்றங்கள், இனப்படுகொலை குறித்து சர்வதேச விசாரணையை மேற்கொள்ள இந்திய அரசு உலக நாடுகளை வலியுறுத்திச் செயற்படுத்த வேண்டுமென மத்திய அரசை தி.மு.க. வலியுறுத்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், இலங்கையின் வடக்கு கிழக்கில் நீர்த்துப் போன அதிகாரப் பங்கீடுகளே அனுமதிக்கப்பட்டுள்ளன. எனவே, அங்குள்ள தமிழர்களின் விருப்பத்திற்கு ஏற்றவாறு நிரந்தரமான அரசியல் தீர்வு அமைய ஈழத் தமிழர்கள், புலம்பெயர் தமிழர்கள் இடையே ஐ.நா.வின் மேற்பார்கையில் பொது வாக்கெடுப்பு நடத்தவும் மத்திய அரசை தி.மு.க. வலியுறுத்தும் என உறுதியளிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், இலங்கையில் இருந்து அகதிகளாக இந்தியாவுக்கு வந்த தமிழர்கள் குறித்தும் கரிசனை காட்டப்பட்டுள்ளதுடன் அவர்களுக்கு இந்தியக் குடியுரிமை வழங்குவதற்கும், இலங்கைக்கு திரும்பிச் செல்ல விரும்புபவர்களுக்குத் தேவையானவற்றைச் செய்வதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  


GalleryGallery