மீண்டும் பள்ளிகள் திறப்பு தள்ளி வைப்பு - ஜுன் 12 ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிப்பு
தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்படும் தேதி மீண்டும் ஒரு வாரம் காலம் தள்ளிவைக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
குறையாத வெயில்
1 முதல் 5ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஜுன் 5ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்றும். 6 முதல் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு ஜுன் 1ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்றும் பள்ளிக்கல்வித்துறை அறிவித்து இருந்தது.
இந்த நிலையில் வெயில் வாட்டி வதைப்பதால் பள்ளிகள் திறக்கும் தேதி தள்ளி வைக்க வேண்டும் என்று அரசுக்கு பல்வேறு கோரிக்கைகள் வந்தது.
அந்த வகையில் ஜுன் 7ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அறிவித்திருந்தார்.
கடந்த 1-ந்தேதிக்கு பதில் 7-ந் தேதி பள்ளிகள் திறக்கப்படும் சமயத்தில் வெயில் குறைந்து விடும் என கணிக்கப்பட்டது. இப்போது வெயில் குறைவதற்கான அறிகுறியே தென்படவில்லை.
தமிழகத்தில் நாளுக்கு நாள் வெப்பம் அதிகரித்து கொண்டே வருகிறது. அக்னி நட்சத்திரம் முடிந்த பிறகும் வெயிலின் உக்கிரம் குறையவில்லை.
சென்னை உள்பட பல்வேறு மாவட்டங்களில் 108 டிகிரிக்கு மேல் வெயில் கொளுத்துகிறது. இயல்பாக பதிவாகும் வெப்ப அளவை விட கடந்த 4 நாட்களாக வெப்பத்தின் அளவு அதிகமாகவே காணப்படுகிறது.
பள்ளிகள் திறப்பு தள்ளிவைப்பு
இதனால் பள்ளிகள் 7-ந்தேதி திறப்பதை மறுபடியும் தள்ளி வைக்க வேண்டும் என்று அரசுக்கு மீண்டும் கோரிக்கைகள் சென்ற வண்ணம் இருந்தது.
இந்த நிலையில் வெயிலின் தாக்கம் தற்போது வரை குறையாத காரணத்தினால் தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு ஒரு வாரம் காலம் தள்ளி வைத்து முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.
தமிழகத்தில் 6 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு வரும் 12 ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் எனவும்,
1 முதல் 5 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஜுன் 14 ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.