பாஜ வேட்பாளராக கவுதமி அறிவிப்பு: அதிமுக தொண்டர்கள் கடும் அதிர்ச்சி
ராஜபாளையத்தில் பாஜ வேட்பாளராக கவுதமியை அறிவித்தது, அதிமுகவினரிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. விருதுநகர் மாவட்டம், ராஜபாளையத்தில் பாஜ சட்டமன்ற தொகுதி மேலிடத் தேர்தல் இணைப்பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி தலைமையில் ஆலோசனை கூட்டம் நேற்று முன்தினம் நடைபெற்றது.
அந்த கூட்டத்தில் சுதாகர் ரெட்டி பேசுகையில், ராஜபாளையம் சட்டமன்ற தொகுதியில் பாஜ சார்பில் போட்டியிடும் நடிகை கவுதமியை வெற்றி பெறச் செய்ய அனைவரும் பாடுபட வேண்டும்என்றார். பின் செய்தியாளர்களிடம் பேசிய சுதாகர் ரெட்டி, பாஜ சார்பில் வேட்பாளராக நடிகை கவுதமியை நாங்கள் முடிவு எடுத்துள்ளோம். கூட்டணி கட்சிகளுடன் முறையான விதிமுறைகளை அனுசரித்து பேச்சு வார்த்தையில் ஈடுபடுவோம்.
இறுதி முடிவு எந்த நிலைப்பாடாகவும் இருக்கலாம் என்றார். அதிமுக, பாஜவிற்கு இடையே தொகுதி உடன்பாடு நிறைவடையாத நிலையில், ராஜபாளையத்தில் வேட்பாளரை பாஜ தன்னிச்சையாக அறிவித்திருப்பது அதிமுகவினரிடைய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.