படையப்பா பாடலை அண்ணாத்த படத்திற்கு காப்பியடித்தாரா இமான் ? - ட்விட்டரில் சர்ச்சை

By Irumporai Oct 05, 2021 07:29 AM GMT
Report

தமிழ் சினிமாவில் கடந்த சில நாட்களாக பாடல்கள் காப்பி சர்ச்சை அதிகமாக உலவி வருகிறது, இந்த நிலையில் நேற்று வெளியான ரஜினியின் அண்ணாத்த பாடல், ரஜினியின் முந்தைய படமான படையப்பா பாடலை தழுவி உருவாக்கப்பட்டுள்ளதாக சமூகவலைதளங்களில் பேசு பொருளாகியுள்ளது.

சிவா இயக்கத்தில் ரஜினி, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள அண்ணாத்த படம் தீபாவளிக்கு வெளியாகிறது. இப்படத்தில் இமான் இசையில் மறைந்த பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடிய 'அண்ணாத்த அண்ணாத்த' பாடலை நேற்று வெளியிட்டனர். ரசிகர்களை இந்த பாடல் கவர்ந்துள்ளது.

வெளியான 16மணிநேரத்தில் 28 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகள் கிடைத்துள்ளன. அதேசமயம் இந்த பாடல் கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் ரஜினி நடித்த படையப்பா படத்தில் வரும் ''என் பேரு படையப்பா’’ பாடலை  கம்யூட்டரில் கொஞ்சம் மெருகேற்றி இமான் வெளியிட்டுள்ளதாக சமூகவலைளதங்களில் சர்ச்சை ஓடிக் கொண்டிருக்கிறது.

இதில் முக்கியமான விஷயம் இரண்டு பாடல்களையும் பாடியவர் எஸ்.பி.பாலசுப்ரமணியம்.இமான் இதற்கு முன்பும் அஜித் நடிப்பில் வெளியான விஸ்வாசம் படத்தில் வரும் வேட்டி கட்டு பாடல், அரசன் சோப் விளம்பரத்தை சுட்டு எடுக்கப்பட்டதாக  நெட்டிசன்கள் மத்தியில் ட்ரோல் ஆனது குறிப்பிடத்தக்கது.