சிபிஐ அமைப்பைக்கண்டு திமுக என்றும் பயப்படாது : ஆர்.எஸ்.பாரதி எச்சரிக்கை
சென்னையில் உள்ள கமலாலயத்தில் இன்று காலை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை திமுகவினர் சொத்து பட்டியலை வெளியிட்டார். இது அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தி வரும் நிலையில், இதற்கு பதிலளிக்கும் விதமாக தேனாம்பேட்டையில் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.
அண்ணாமலைக்கு பதில்
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய ஆர்,எஸ் பாரதி சாலமன் பாப்பையா அவர்களின் பட்டிமன்றத்தை கேட்பதை நான் வாடிக்கையாக வைத்துள்ளேன். ஆனால் இந்த ஆண்டு அதை கேட்கமுடியவில்லை. பட்டிமன்றத்தில் இடையே சாலமன் பாப்பையா செய்வது ரசிக்கத்தக்கவையாக இருக்கும், நகைச்சுவையாக இருக்கும். அதுபோல, இன்று அண்ணாமலை அளித்துள்ள பேட்டியை பார்க்கும் பொழுது சிரிப்பதற்கு தோன்றுகிறது தவிர, அவரது அறியாமையை பார்த்து இவர் எப்படி இவ்வளவு நாள் போலீஸ் துறையில் இருந்தார் என வியப்பாக உள்ளது என்று கூறினார்.

ஆர்.எஸ் பாரதிக்கு எச்சரிக்கை
மேலும், அவர் கூறியிருக்கும் குற்றச்சாட்டுகள், ஏறத்தாழ 10 அல்லது 12 பேர் மட்டுமே உள்ளது. அவர்கள் அனைவரும் தேர்தலில் போட்டியிட்டவர்கள். அதன்படி, பொதுவாக தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தங்களது சொத்துமதிப்பை தேர்தல் ஆணையத்தில் தெரிவிக்க வேண்டும் என்பது கட்டாயமாகும். அந்தவகையில், அண்ணாமலை குறிப்பிட்டிருப்பவர்கள் அனைவரும் தங்களது சொத்துமதிப்பை தெரிவித்துள்ளனர் என்று கூறினார்.
ஏற்கனவே, எம்ஜிஆர், ஜெயலலிதா முயற்சி செய்தும் வழக்கு பதிவு செய்யமுடியவில்லை, சிபிஐ அமைப்பைக்கண்டு திமுக என்றும் பயப்படாது, முதல்வரை களங்கப்படுத்தும் அண்ணாமலையின் எண்ணம் ஒரு போதும் நிறைவேறாது என்று கூறினார். மேலும், திமுகவின் சொத்து என்று அண்ணாமலை கூறியது தொடர்பான ஆவணங்களை 15 நாட்களுக்குள் அவர் ஒப்படைக்க வேண்டும் என அண்ணாமலைக்கு கெடு விதித்துள்ளார்.