தனது கடைசி பட்ஜெட் உரையிலும் திமுக மக்களை ஏமாற்றிவிட்டது- அண்ணாமலை

Tamil nadu K. Annamalai
By Yashini Feb 17, 2026 12:36 PM GMT
Report

தமிழ்நாடு சட்டப்பேரவையில் 2026-27ஆம் ஆண்டுக்கான இடைக்கால நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சா் தங்கம் தென்னரசு இன்று தாக்கல் செய்தார்.

இடைக்கால பட்ஜெட் தொடர்பாக பல அரசியல் தலைவர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், இதுகுறித்து தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார். 

தனது கடைசி பட்ஜெட் உரையிலும் திமுக மக்களை ஏமாற்றிவிட்டது- அண்ணாமலை | Annamalais Comments On Tn Interim Budget

அவர் கூறுகையில்..,

கடந்த ஐந்து ஆண்டுகளாக தமிழக மக்களை ஏமாற்றி வந்த திமுக அரசு, தனது கடைசி பட்ஜெட் உரையிலும் பொதுமக்களை ஏமாற்றுவதை விடவில்லை.  

தூய்மைப் பணியாளர்கள், பணி நிரந்தரம் மற்றும் சம வேலைக்கு சம ஊதியம் கோரும் ஆசிரியப் பெருமக்கள், அரசு மருத்துவர்கள், லஞ்சம் வாங்கிக் கொண்டு அரசுப் பணிகளை விற்பனை செய்து வரும் திமுக அமைச்சர்களை எதிர்த்துப் போராடும் இளைஞர்கள் என, கடந்த ஐந்து ஆண்டுகளில், எந்தத் தரப்பு மக்களின் கோரிக்கைகளையுமே கண்டுகொள்ளாமல், கடைசி பட்ஜெட்டில் கூட பொய்களை மட்டுமே சொல்லுவேன் என்று அடம்பிடித்திருக்கிறார் தமிழக நிதியமைச்சர்.

கட்டிடங்கள் இல்லாமல் மரத்தடியில் அமர்ந்து படிக்கும் நம் குழந்தைகள், அடிப்படை வசதிகள் கூட இல்லாத மாணவர் விடுதிகள், பள்ளி மாணவர்களிடையே பெருகி வரும் போதைப் பொருள் கலாச்சாரம் என எது குறித்தும் அக்கறை இல்லாமல், வழக்கம்போல பொய்களை வாசித்துச் சென்றிருக்கிறார்.

கடந்த ஐந்து ஆண்டுகளில், திமுக வாங்கிக் குவித்த தமிழகத்தின் மொத்த கடன் தொகை, வரும் மார்ச் 31, 2027ல் 10,62,248 கோடியாக இருக்கும் என கூறியிருக்கிறார்கள். கொடுத்த வாக்குறுதிகளையும் நிறைவேற்றவில்லை.

புதிய திட்டங்கள் எதையும் செயல்படுத்தவில்லை. பொதுமக்களின் அடிப்படைத் தேவைகளைக் கூட பூர்த்தி செய்யவில்லை. எதற்காக திமுக இத்தனை லட்சம் கோடி கடன் வாங்கியது? எங்கே சென்றது இந்த நிதி மொத்தமும்?

திமுகவுக்கு வாக்களிக்காத கோயம்புத்தூர் மற்றும் மதுரை நகரங்களில், மெட்ரோ திட்டம் வரக்கூடாது என்று, வேண்டுமென்றே தவறான திட்ட அறிக்கையை வழங்கிவிட்டு, தற்போது மத்திய அரசு மீது குற்றம் சுமத்தும் தமிழக நிதியமைச்சர், திருத்தப்பட்ட திட்ட அறிக்கையை ஏன் இன்னும் சமர்ப்பிக்கவில்லை? உண்மையாகவே மெட்ரோ திட்டம் வர வேண்டுமென்று அக்கறை திமுகவுக்கு இல்லை. அதனால்தான், நான்கு மாதங்கள் ஆகியும், திருத்தப்பட்ட திட்ட அறிக்கையை சமர்ப்பிக்கவில்லை.

நிதியமைச்சர் திரு. தங்கம் தென்னரசு அவர்கள், அவசர அவசரமாக பட்ஜெட் அறிக்கையை வாசித்ததைப் பார்த்தால், 'அப்பாடா, இதை விரைவில் முடித்து விட்டால், இனி எப்போதும் நமக்கு இந்த பட்ஜெட் அறிக்கை வாசிக்கும் தொல்லை இருக்காது. எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்து பொழுது போக்கலாம்' என்ற நிம்மதிப் பெருமூச்சுதான் வெளிப்படுகிறது.

முதலமைச்சரின் தந்தை மறைந்த திரு கருணாநிதி அவர்கள் காலத்தில் இருந்து, திமுக பட்ஜெட் என்றாலே தவறாமல் இடம்பெறும், கூவத்தைச் சுத்தம் செய்வோம், அடையாறை சுத்தம் செய்வோம் என்று கூறி ஆண்டுதோறும் நிதி ஒதுக்கீடு செய்யும் நகைச்சுவை, இந்த ஆண்டு இடம்பெறவில்லை என்பது, உண்மையாகவே வருத்தமளிக்கிறது.

கடந்த இரண்டு ஆண்டுகளாக, அடையாறைச் சுத்தம் செய்ய ஆண்டுக்கு ₹1,500 கோடி ஒதுக்கீடு செய்ததாகக் கூறிய நிதி எங்கு போனது என்பதும் தெரியவில்லை என்று கூறியுள்ளார்.