விருதுநகரில் 'பாரத மாதா சிலை' அகற்றப்பட்ட விவகாரம் - அண்ணாமலை கண்டனம்!

Tamil nadu DMK BJP K. Annamalai
By Jiyath Aug 08, 2023 06:30 AM GMT
Report

பாரத மாதா சிலை அகற்றப்பட்டதிற்கு கண்டனம் தெரிவித்துள்ளார் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை.

சிலை அகற்றம்

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் சாலையில் உள்ள பாஜக கிழக்கு மாவட்ட தலைமை அலுவலகத்தில் நேற்று மாலை அனுமதியின்றி பாரத மாதா சிலை அமைக்கப்பட்டது. தகவல் அறிந்து வந்த வருவாய்த்துறை அதிகாரிகள் மற்றும் போலீசார் அனுமதியின்றி சிலை வைக்கப்பட்டுள்ளதாக கூறி அதனை அகற்றுமாறு கட்சி நிர்வாகிகளிடம் கூறினர்.

விருதுநகரில்

இதனால் நிர்வாகிகளுக்கும் அதிகாரிகளுக்கும் இடையில் கடும் வாக்குவாதம் நடைபெற்றது. சிலையை வைக்க உரிய அனுமதி பெறுமாறு அதிகாரிகள் வலியுறுத்தினர். இதனைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் சிலையை அகற்ற உத்தரவிட்டார்.

அதிகாலை 3 மணி அளவில் ஏஎஸ்பி. கருண்காரத் தலைமையில் 100க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு சிலை அகற்றப்பட்டது. இந்நிலையில் சிலை அகற்றப்பட்ட விவகாரத்திற்கு கண்டனம் தெரிவித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ட்விட்டர் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அண்ணாமலை கண்டனம்

அந்த பதிவில் 'விருதுநகர் பாஜக மாவட்ட அலுவலகத்தில் நிறுவப்பட்டிருந்த பாரத அன்னையின் சிலையை சுவர் ஏறிக் குதித்து காவல்துறையினர் நேற்று இரவு அப்புறப்படுத்தியிருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது.

தமிழகத்தில் தற்போது நடைபெற்று வரும் ஊழல் திமுக ஆட்சியில், ஒரு கட்சிக்கு சொந்தமான இடத்தில் பாரத அன்னைக்கு சிலை வைப்பதற்குக் கூட உரிமை இல்லாத சூழலே நிலவி வருகிறது.

ஊழல் திமுக அரசின் அவலங்களை எங்கள் 'என் மண் என் மக்கள்' யாத்திரையின் மூலமாக மக்களுக்கு வெளிச்சம் போட்டு காட்டுவதால் இந்த மாவட்டத்தைச் சேர்ந்த இரண்டு அமைச்சர்கள் அச்சத்தின் உச்சியில் இருப்பதன் வெளிப்பாடே இந்த நடவடிக்கை. பாரத அன்னையின் புகழ் ஓங்குக என்று அண்ணாமலை பதிவிட்டுள்ளார்.