துரைமுருகன் பேசிய அதே வார்த்தை..அவரது தந்தைகாக ஸ்டாலின் மன்னிப்பு கேட்பாரா? அண்ணாமலை!
தந்தை மறைந்த கருணாநிதி சார்பாக மன்னிப்பு கேட்பாரா? என அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.
அண்ணாமலை
இது தொடர்பாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் தளத்தில் அறிக்கை வெளியிட்டிருந்தார். அதில், “பல ஆண்டுகளுக்கு முன்பு யாரோ எழுதிய பாடலை, நாம் தமிழர் கட்சியின் நிர்வாகி திரு. சாட்டை துரைமுருகன் அவர்கள் மேடையில் பாடினார் என்பதற்காக அவரைக் கைது செய்திருக்கிறது தமிழகக் காவல்துறை.
அத்தோடு நில்லாமல், அந்தப் பாடலில் இடம் பெற்ற வார்த்தைக்காக, அவர் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்திருக்கிறார்கள். மறைந்த முன்னாள் முதலமைச்சர் திரு. கருணாநிதி அவர்கள், அதே வார்த்தையைப் பலமுறை தனது முகநூல் பக்கத்தில் பதிவு செய்திருக்கிறார்.
அப்போதெல்லாம் தவறாகத் தெரியாதது, தற்போது மட்டும் எப்படித் தவறானது என்பதை, வழக்குப் பதிவு செய்வதற்கு முன்பாவது, தமிழக காவல்துறை ஆலோசித்திருக்கவேண்டும். போலி சமூக நீதி பேசி ஊரை ஏமாற்றும் திமுக, எதிர்க்கட்சிகளைப் பழிவாங்குவதற்காக பட்டியல் சமூக மக்களைப் பயன்படுத்துவது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.
ஸ்டாலின் மன்னிப்பு
உடனடியாக, இது போன்ற பழிவாங்கும் நடவடிக்கைகளை திமுக அரசு கைவிட வேண்டும் என்றும், திரு. சாட்டை துரைமுருகன் மீது தொடர்ந்துள்ள போலி வழக்கைக் கைவிட வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.
உண்மையாகவே முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு, பட்டியல் சமூக மக்கள் மீது அக்கறை இருந்தால், மூச்சுக்கு முந்நூறு முறை, நான் கருணாநிதியின் மகன் என்று கூறிக்கொள்ளும் அவர்,
திரு. சாட்டை துரைமுருகன் பேசிய அதே வார்த்தையைப் பயன்படுத்திய அவரது தந்தை மறைந்த கருணாநிதி சார்பாக மன்னிப்பு கேட்பாரா?” எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.