அண்ணாமலை தான் காரணம்...எப்பவுமே கூட்டணி இல்லதான் - கே.பி.முனுசாமி திட்டவட்டம்
உண்மைக்கு புறம்பான கருத்துக்களை அண்ணாமலை பேசிய காரணத்தால் தான் கூட்டணி முறிவு ஏற்பட்டுள்ளது என அதிமுகவின் துணை பொதுச்செயலாளர் கே.பி.முனுசாமி தெரிவித்துள்ளார்.
பிளவுப்பட்ட அதிமுக பாஜக கூட்டணி
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவிற்கு பிறகு, அதிமுக பாஜகவுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்க துவங்கியது. இதே காலகட்டத்தில் தான் பாஜக தலைவர் அண்ணாமலையும் தமிழக அரசியலில் சலசலப்புகளை ஏற்படுத்த துவங்கினார்.
ஜெயலலிதாவை அவர் விமர்சித்ததில் இருந்தே அதிமுக பாஜக கூட்டணியில் சிறு சலசலப்புகள் ஏற்பட துவங்கிய நிலையில், அண்ணாதுரையை அண்ணாமலை விமர்சிக்க பொறுத்திருந்து போதும் என்ற நிலைப்பாட்டை அடைந்த அதிமுக தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து அதிரடியாக வெளியேறியது.
ஒருபோதும் கூட்டணி கிடையாது
அப்போது வெளியிடப்பட்ட தீர்மான அறிக்கையில், தமிழக பாஜக தலைமையின் செயல்களையே காரணம் காட்டி கூட்டணி முறிவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இன்று செய்தியாளர்களை சந்தித்த அதிமுகவின் துணை பொதுச்செயலாளர் கே.பி.முனுசாமி, உண்மைக்கு மாறான விமர்சனங்களை அண்ணாமலை வைத்ததாலேயே கூட்டணி முறிவு என தெரிவித்தார்.
பாஜகவுடன் மீண்டும் கூட்டணி இல்லை என்று உறுதிபட தெரிவித்த அவர், பாஜக கூட்டணியில் நேரம் வரும்போது அதிமுக சேர்ந்துவிடும் என்பது கவனத்தை திசைதிருப்பும் செயல் என்றும் அதிரடியாக கருத்து தெரிவித்துள்ளார். மேலும் பேசிய அவர், பாஜகவுடன் வரும் மக்களவை தேர்தல் மட்டுமின்றி வரும் 2026-ஆம் ஆண்டின் சட்டமன்ற தேர்தலிலும் பாஜகவுடன் கூட்டணி இல்லை என அதிமுகவின் முடிவை அழுத்தம் திருத்தமாக தெரிவித்துள்ளார்.