விஜய் எத்தனை முறை வெளியே வந்துள்ளார்; எங்களுக்கு பயமில்லை - அண்ணாமலை
சீமானின் பாதை தனி எங்களின் பாதை தனி என அண்ணாமலை பேசியுள்ளார்.
அண்ணாமலை
தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை, சர்வதேச அரசியல் தொடர்பான படிப்பை படிப்பதற்காக கடந்த ஆகஸ்ட் மாதம் 28-ம் தேதி லண்டன் சென்றிருந்தார்.
3 மாதங்கள் படிப்பு முடிந்து இன்று(01.12.2024) தமிழ்நாடு திரும்பிய அவர், விமானநிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
விஜய் அரசியல்
அப்போது பேசிய அவர், கடந்த மூன்று மாதங்களாக தமிழக அரசியல் பல மாற்றங்கள் நடந்துள்ளன. உச்ச நடிகர் விஜய் அரசியலுக்கு வந்துள்ளார், அவரை வரவேற்கிறேன். காரணம் மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் வந்துள்ளார். மாநாட்டில் பல்வேறு விஷயங்கள் குறித்து பேசியிருக்கிறார்.
எதற்கெல்லாம் பதில் சொல்ல வேண்டுமோ அதற்கெல்லாம் பாஜக தலைவர்கள் பதில் சொல்லியிருக்கிறார்கள். புது நபர்களை பார்த்து பாஜக எப்போதும் பயப்படாது. விஜய் 25 ஆண்டுகளாக படிப்படியாக தன்னை உயர்த்திக்கொண்டு வந்திருக்கிறார்.
ஆனால், அரசியல் களம் என்பது வேறு 365 நாளும் களத்தில் இருக்க வேண்டும். அக்டோபர் 28-க்கு பிறகு எத்தனை முறை விஜய் வெளியே வந்திருக்கிறார். திராவிட கட்சிகள் பேசுவதைதான் விஜய் பேசுகிறார். தமிழ்நாட்டில் திராவிட கட்சிகளின் வாக்குகள் இன்று மூன்றாக பிரிந்துள்ளது.
சீமானின் பாதை
சீமானின் பாதை தனி எங்களின் பாதை தனி. அவர் பாஜகவை கடுமையாக விமர்சித்து வருகிறார். எனவே அவரின் பாதையில் அவர் போகட்டும், எங்களின் பாதையில் நாங்கள் போகிறோம்.
தமிழ்நாட்டில் 2026 தேர்தல் சரித்திர தேர்தலாக அமையப்போகிறது. காரணம், சீமான், விஜய், பாஜக, ஏற்கனவே இருக்கும் திராவிட கட்சிகள் எல்லாம் இருக்கிறது. எங்களுடன் கூட்டணியில் இருக்கும் பெரிய கட்சியான பாமக, டிடிவி தினகரன் உள்ளிட்டோர் இருக்கிறார்கள்.
உதயநிதி ஸ்டாலின்
எம்எல்ஏ, அமைச்சர், துணை முதல்வர் என உதயநிதி ஸ்டாலின் வேகமாக வளர்ச்சியடைந்துள்ளார். உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சர் ஆனதன் மூலம் திமுக ஒரு குடும்ப கட்சி என்பதை மீண்டும் நிரூபித்துள்ளது.
ஊழல் வழக்கில் சிறை சென்று வந்துள்ள செந்தில் பாலாஜியை ஒரு நிரபராதியை கொண்டாடுவதைப் போல முதலமைச்சர் கொண்டாடுகிறார். இதைதான் ஆம் ஆர்மி கட்சியும் செய்து வருகிறது. தமிழக மக்கள் எல்லாவற்றியும் கவனித்து கொண்டு இருக்கிறார்கள்" என பேசினார்