முதலமைச்சர் விஜய்க்கு அண்ணாமலை கண்டனம்
We The Leaders அமைப்பின் தலைவரான அண்ணாமலை,
தமிழக முதல்-அமைச்சர் ஜோசப் விஜய் அவர்களின் கவனத்திற்கு,...
தி.மு.க. ஆட்சி வீழ்ச்சியடைந்ததற்கான முக்கியக் காரணங்களில் ஒன்று, ஆளுங்கட்சியினர் என்ற அதிகார போதையில், மக்களின் விமர்சனங்களையும் எதிர்க்கருத்துகளையும் அலட்சியப்படுத்தியதுதான்.
அதே பாதையில் உங்கள் அரசும் பயணிக்கிறதோ என்ற அச்சம் தற்போது எழுந்துள்ளது. கடந்த ஒரு மாதத்தில் மட்டும், சமூக வலைத்தளங்களில் உங்கள் கட்சியினருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் மற்றும் விமர்சனங்களுக்காக மாற்றுக் கருத்து கொண்ட 25-க்கும் மேற்பட்டோர் மீது வழக்குகள் தொடரப்பட்டுள்ளதாக தகவல்கள் வருகின்றன.

குறிப்பாக, தனது குடும்பத்தை தகாத வார்த்தைகளால் விமர்சித்த த.வெ.க. தொண்டருக்கு பதிலளித்த We The Leaders தன்னார்வலர் ஒருவர் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்திருப்பது கவலைக்குரியது.
சமூக வலைத்தளங்களில் தனிநபர் அவதூறு மற்றும் வரம்பு மீறிய பேச்சுகளை கண்காணிப்பது அவசியம்தான்.
ஆனால், ஆட்சியையும் ஆளும் கட்சியையும் விமர்சிக்கும் ஒவ்வொரு குரலையும் வழக்கு, கைது என்ற அதிகாரத்தின் மூலம் அடக்க முயற்சிப்பது ஜனநாயகத்திற்கு ஆரோக்கியமானதல்ல.
முதல்-அமைச்சரை மகிழ்விக்க வேண்டும் என்ற எண்ணத்தில் அதிகாரத்தில் இருப்பவர்கள் தன்னிச்சையாக செயல்படுவதை நீங்கள் அனுமதிக்கக் கூடாது.
நீங்கள் இன்று ஒரு கட்சியின் தலைவர் மட்டுமல்ல; தமிழகத்தின் அனைத்து மக்களுக்கும் பொதுவான முதல்-அமைச்சர். எதிர்க்கருத்துகளும் விமர்சனங்களும் ஜனநாயகத்தின் இயல்பான அங்கங்கள்.
சிறிய விமர்சனங்களுக்குக்கூட வழக்கு, கைது என்ற போக்கு தொடர்வது துரதிருஷ்டவசமானது.
எனவே, இந்தப் போக்கை உடனடியாகத் தடுத்து, ஜனநாயக குரல்களுக்கும் விமர்சனங்களுக்கும் உரிய இடம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன் என தெரிவிக்கப்பட்டுள்ளது.