கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்கள் ஓட்டுகளை வாங்க விஜய் இப்படி பேசுகிறார் - அண்ணாமலை
விஜய்க்கு மணிப்பூரை சுற்றி காட்ட தயார் என அண்ணாமலை பேசியுள்ளார்.
அண்ணாமலை
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கோவையில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
இதில் பேசிய அவர், அம்பேத்கர் புத்தகத்தை வெளியிட வேறு ஆளே கிடைக்கவில்லையா? அந்த புத்தகத்தை பெற்றுக் கொண்ட ஆனந்த் டெல்டும்டே ஒரு அர்பன் நக்சல். அவரது சகோதரர் மிலிந்த் டெல்முடே, கசுட்டுக்கொல்லப்பட்ட நக்சல்களில் ஒருவர்.
திருமாவளவன்
அம்பேத்கரை வைத்து தமிழகத்தில் அரசியல் வியாபாரம் நடக்கிறது.லாட்டரி அதிபர் மார்டினுடைய மருமகன் ஆதவ் அர்ஜுனா. திமுகவில் சபரீசனுக்கு நெருக்கம். விசிகவுக்கு இவர் தான் நிதி வழங்குகிறார்.
திருமாவளவன் அந்த நிகழ்ச்சியில் பங்கேற்க மாட்டேன் என்று புறக்கணித்துவிட்டார். ஆனால் அக்கட்சியின் துணை பொதுச் செயலாளர் அந்த நிகழ்ச்சிக்கு போயிருக்கிறார். அப்படி என்றால் கட்சி திருமாவளவன் கையில் இருக்கிறதா அல்லது துணை பொதுச் செயலாளர் கையில் இருக்கிறதா? விசிக கட்சிக்கு ஒரு தலைவரா அல்லது இரண்டு தலைவரா?
கூட்டணியில் உள்ள கட்சியை பற்றி பேசிய பிறகு கூட ஒரே கட்சியில் துணை பொதுச்செயலாளரும், தலைவரும் இருக்கிறார்கள் என்றால் எப்படி? கட்சிக்கு நிதி வழங்கும் முக்கிய நபர் மீது கைவைக்க திருமாவளவன் தயாராக இல்லை.
விஜய்
தவெக தலைவர் விஜய் அடிப்படை அரசியல் அறிவை வளர்த்துக்கொள்ள வேண்டும். மணிப்பூர் பற்றி விஜய் முழுமையாக தெரிந்து கொள்ள வேண்டும். யார் ஆட்சியில் அதிகமானோர் இறந்தார்கள்? மணிப்பூரில் என்ன நடக்கிறது என புரிந்து கொள்ள வேண்டும்.
விஜய் மணிப்பூர் சென்று பார்வையிட தயாராக இருந்தால் அழைத்து சென்று சுற்றி காட்டுகிறேன். மணிப்பூரில் யாருக்கும் எந்த பிரச்சனையும் ஏற்படாத வகையில் மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
தமிழ்நாட்டில், பாஜகவை இந்துத்துவா கட்சி என்று கூறினால், கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்கள் ஓட்டுகளை வாங்கலாம் என விஜய் எண்ணுகிறார். கோவா, மணிப்பூர், மேகாலயா உள்ளிட்ட மாநிலங்களில் கிறிஸ்தவர்கள் அதிகமுள்ளனர். அங்கெல்லாம் பாஜக ஆட்சி நடக்கிறது என்பதை விஜய் தெரிந்துகொள்ள வேண்டும்" என பேசினார்.