நாக்கை பிடுங்குவேன்'னு சொல்றது ரொம்ப தப்பு...மத்திய அமைச்சருக்கு அண்ணாமலை கண்டனம்
மத்திய நீர்வள துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் சனாதனத்தை குறித்து கருத்து தெரிவிப்பவர்களின் நாக்கை பிடுங்குவோம், கண்ணை தோண்டுவோம் என கூறிய கருத்திற்கு அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார்.
கஜேந்திர சிங் ஷெகாவத் கருத்து
தமிழகத்தில் நடைபெற்ற சனாதன ஒழிப்பு மாநாட்டில் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், டெங்கு மலேரியா போன்ற சனாதனத்தை ஒழிக்கவேண்டும் என கடுமையான கருத்துக்களை முன்வைத்தார். இந்த கருத்துக்கள் தேசிய அரசியலில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தி வருகின்றது.
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, ராஜஸ்தான் மாநில பரப்புரையில் இருந்த போது உதயநிதியின் இந்த கருத்துக்களை எதிர்த்து பேசிய நிலையில், இந்த விவகாரம் தேசிய அரசியலில் அதிகளவில் பேசப்பட துவங்கியது.
அண்ணாமலை கண்டனம்
மத்திய அமைச்சர்கள் பலரும் இது குறித்து கடுமையான கருத்துக்களை தெரிவித்து வரும் நிலையில், நேற்று மத்திய நீர்வள துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் கூறிய கருத்துக்கள் மிகவும் பரபரப்பை ஏற்படுத்தியது. சனாதனத்தை பற்றி பேசினால் நாக்கை பிடிங்குவோம் என்றும் கண்ணை நோண்டுவோம் என்றும் கடுமையான கருத்துக்களை அவர் தெரிவித்தார்.
இந்த நிலையில் மத்திய அமைச்சரின் இந்த கருத்திற்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அண்ணாமலை பேசுகையில், நாக்கை துண்டிப்பதாக வன்முறையை தூண்டும் வகையில் மத்திய அமைச்சர் பேசியது தவறு என குறிப்பிட்டார். சனாதன விவகாரத்தில் அண்ணாமலை உதயநிதி குறித்து கடுமையான கருத்துக்களை தெரிவித்து வரும் நிலையில், தற்போது இந்த கருத்து பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.