தமிழகம் பிற மாநிலங்களை விட பின் தங்கி உள்ளது - அண்ணாமலை குற்றச்சாட்டு

Tamil nadu K. Annamalai
By Karthikraja Jul 18, 2024 03:33 PM GMT
Report

நிதி ஆயோக் அறிக்கையின் படி தமிழ்நாடு பல துறைகளில் பின் தங்கி உள்ளதாக அண்ணாமலை குற்றஞ்சாட்டியுள்ளார்.

நிதி ஆயோக்

சமீபத்தில் சமூக சமத்துவம், பொருளாதார வளர்ச்சி மற்றும் சுற்றுச்சூழல் நிலைத்தன்மை ஆகியவற்றை கோட்பாடாக கொண்டு மாநிலங்களின் வளர்ச்சி குறித்து அறிக்கை ஒன்றை நிதி ஆயோக் அறிக்கை வெளிவிட்டது. 

niti aayog sdg index tamilnadu

இந்த அறிக்கையின் படி பல துறைகளில் பிற மாநிலங்களை விட தமிழ்நாடு பின் தங்கி உள்ளதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை குற்றஞ்சாட்டியுள்ளார். இது குறித்து அவரது எக்ஸ் பக்கத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். 

மாநிலங்களின் வளர்ச்சி பட்டியல் - இந்தியளவில் முதல் இடத்தில் தமிழகம்!!

மாநிலங்களின் வளர்ச்சி பட்டியல் - இந்தியளவில் முதல் இடத்தில் தமிழகம்!!

அண்ணாமலை

இதில் அவர் கூறியதாவது, "நிதி ஆயோக் வெளியிட்டுள்ள, நிலையான வளர்ச்சி இலக்குகள் (Sustainable Development Goals - SDG) குறியீடுகளில், தமிழகம், பிற மாநிலங்களை விட, பல துறைகளில் பின் தங்கி இருப்பது தெரிய வந்துள்ளது. குறிப்பாக, ஆண் பெண் சமத்துவக் குறியீட்டில் 10 ஆவது இடத்திலும், சுத்தமான குடிநீர் மற்றும் சுகாதாரக் குறியீட்டில் 9 ஆவது இடத்திலும், நிலையான நகரங்கள் மற்றும் சமூகக் குறியீட்டில் 10 ஆவது இடத்திலும், பொறுப்பான நுகர்வு மற்றும் உற்பத்திக் குறியீட்டில் 10 ஆவது இடத்திலும், நிலத்தில் வாழ்க்கைக் குறியீட்டில் 15 ஆவது இடத்திலும், அமைதி, நீதி மற்றும் வலிமையான நிறுவனக் குறியீட்டில், 9 ஆவது இடத்திலும் எனப் பல குறியீடுகளில், தமிழகம், பிற மாநிலங்களை விட மிகுந்த பின்னிடவை சந்தித்துள்ளது. 

bjp annamalai latest photo

குறிப்பாக, பெண்கள், குழந்தைகள், பட்டியல் மற்றும் பழங்குடி சமூக மக்கள் ஆகியோருக்கு எதிரான வன்முறை, கடந்த மூன்று ஆண்டுகளில் தமிழகத்தில் மிகவும் அதிகரித்திருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. குழந்தைகள் காணாமல் போவதும், சுமார் 11% அதிகரித்துள்ளது. மேலும், தமிழகத்தில் சாலை விபத்துக்களால் ஏற்படும் மரணங்களும், தற்கொலைகளும் கடந்த மூன்று ஆண்டுகளில் மிகவும் அதிகரித்திருப்பதும், அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வன்முறை அதிகரிப்பு

இது தவிர, உற்பத்தித் துறைகளில் வேலைவாய்ப்புகள் குறைந்திருப்பதும், புதிய கண்டுபிடிப்புத் திறன் 37.91% லிருந்து, பாதிக்கும் மேல், 15.69% ஆகக் குறைந்திருப்பதும், மிகுந்த அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது. இவை தவிர, உயர்கல்வி மொத்த சேர்க்கை விகிதம் குறைந்திருப்பதும், எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு, மொழித் திறன் மற்றும் கணிதப் பாடத் திறன் குறைந்திருப்பதும், மிகுந்த கவலைக்குரியது. 

பட்டியல் மற்றும் பழங்குடி சமூக மக்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகரித்திருப்பது, தமிழகத்தில் சமூக நீதிக்கு எதிரான போக்கு நிலவுவதைக் காட்டுகிறது. மேலும், பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான வன்முறை மற்றும், சாலை விபத்துக்கள் அதிகரித்திருப்பதற்கு, தமிழகம் முழுவதும் நடக்கும் கட்டுப்பாடற்ற மது விற்பனை, கள்ளச்சாராய விற்பனை, கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருள்கள் விற்பனையே, அடிப்படைக் காரணமாக இருப்பதை மிக எளிதாக உணர முடிகிறது.

திமுக அரசின் நிர்வாக குளறுபடிகளாகவும் குறைபாடுகளாகவும் தமிழக பாஜக இதுவரை தொடர்ச்சியாகச் சுட்டிக்காட்டிய பல விஷயங்களை நிதி ஆயோக் அறிக்கை பிரதிபலித்துள்ளது. வழக்கம் போல் திசைதிருப்பும் முயற்சிகளில் ஈடுபடாமல், மாநில நலனை மனதில் கொண்டு ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு திமுக அரசை வலியுறுத்துகிறேன்." என தெரிவித்துள்ளார்.