பாருக்குள்ளே நல்ல நாடு என்பதை தவறாக புரிந்து கொண்டுள்ள முதல்வர் முக ஸ்டாலின் ..!! அண்ணாமலை விமர்சனம்
என் மண் என் மக்கள் பாதயாத்திரையின் ஒரு பகுதியாக தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை திருவாரூர் மாவட்ட மன்னார்குடியில் மக்களிடம் உரையாற்றினார்.
அண்ணாமலை உரை
தொடர்ந்து தனது நடைப்பயணத்தை தீவிரமாக மேற்கொண்டு வரும் தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, மக்களிடமும் உரையாற்றி வருகின்றார். நேற்று மன்னார்குடியில் உரையாற்றிய அவர், இந்த மாவட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசினால் கொண்டு வரப்பட்ட நலத்திட்டங்களை குறித்து பட்டியலிட்டார்.
தொடர்ந்து, கடந்த 2010 ஆம் ஆண்டு மன்னார்குடியின் வடசேரியில் திமுக நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.பாலு சாராய ஆலை கருத்துக் கேட்பு கூட்டத்தில் மக்களைத் தாக்கிய சம்பவத்தின் தினத்தின் கருப்பு தினம் இன்று வரை அனுசரிக்கப்படுகிறது என குறிப்பிட்டார்.
மேலும், மகாகவி பாரதியாரின் "பாருக்குள்ளே நல்ல நாடு" என பாடியதை சுட்டிக்காட்டி அதனை தமிழ்நாட்டின் முதல்வர் ஸ்டாலின் தவறாக நினைத்துக் கொண்டார் என விமர்சித்து தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளைத் திறந்து வைத்திருக்கிறார் என குற்றம்சாட்டினார்.
புறக்கணிக்கப்பட வேண்டும்
ஆனால், திமுகவினர் சம்பாதிப்பதற்காக, சாராய விற்பனையைத் தொடர்ந்து கொண்டிருக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின் என்று சாடிய அண்ணாமலை, எப்படி குளத்தில் இருக்கும் தண்ணீர் சூரியனால் உறிஞ்சப்படாமல் தாமரை இலை தடுக்கிறதோ, அதே போல, தமிழக மக்களின் நலன் திமுகவால் உறிஞ்சப்படாமல் பாஜக தடுக்கும் என நம்பிக்கை தெரிவித்தார்.
டெல்டா பகுதியை தொடர்ந்து வஞ்சிக்கும் திமுக ஆட்சி அகற்றப்படவேண்டும் என மக்களிடம் கேட்டுக்கொண்ட அண்ணாமலை, அதன் முதல் கட்டமாக வரும் 2024 நாடாளுமன்ற தேர்தலில், தமிழகம் முழுவதும் திமுக கூட்டணி முழுமையாகப் புறக்கணிக்கப்பட வேண்டும் என்று கூறி, பாரதப் பிரதமர் நரேந்திர மோடியின் நல்லாட்சி தொடர தமிழகம் முழுவதும் பாஜக கூட்டணி வேட்பாளர்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும்." எனக் கேட்டுக்கொண்டார்.