ஞானசேகரன் யாரிடம் பேசினான் என்ற கால் ரெக்கார்டு என்னிடம் உள்ளது - அண்ணாமலை
ஞானசேகரனின் ஒரு வருட கால் டீட்டெய்ல் ரெக்கார்டு என்னிடம் உள்ளதாக அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
அண்ணா பல்கலைக்கழகம்
சென்னை கிண்டி அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் தமிழ்நாடு முழுக்க அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இந்த குற்றத்தில் ஈடுபட்ட ஞானசேகரன் என்பவரை காவல்துறையினர் கைது செய்து விசாரித்து வருகின்றனர். இந்த வழக்கில் பாதிக்கப்பட்ட மாணவியின் தகவல்களுடன் FIR வெளியானது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
அண்ணாமலை
இந்த வழக்கை 3 பெண் ஐ.பி.எஸ். அதிகாரிகள் கொண்ட சிறப்புப் புலனாய்வுக் குழு விசாரித்து வருகிறது. இதில் விசாரணைக்காக பத்திரிகையாளர்களின் செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்து பேசினார். இதில் பேசிய அவர், "தமிழக மக்கள், 'யார் இந்த சார்' என்று கேட்டால், காவல்துறையினர், பத்திரிகையாளர்களை கூப்பிடுகிறார்கள். FIR-ஐ லீக் செய்தவர் யார் என்பது.தான் கேள்வி.
ஞானசேகரனின் ஒரு வருட மொபைல் போன் கால் டீட்டெய்ல் ரெக்கார்டு என்னிடம் உள்ளது. டிசம்பர் 23 ஆம் தேதி யாரிடம் பேசினார், 24ம் தேதி யாரிடம் பேசினார் என்றெல்லாம் விவரங்கள் இருக்கின்றன. இதில் சில காவல் அதிகாரிகளும் சம்பந்தப்பட்டுள்ளனர்.
பத்திரிகையாளர்கள்
எல்லா வேலையும் அண்ணாமலை செய்ய முடியாது. எஸ்.ஐ.டி அந்த வேலையை செய்கிறதா என்று பார்க்கிறேன். யார் அந்த சார் என்பதை எஸ்.ஐ.டி சொல்ல வேண்டும். எப்.ஐ.ஆர் நகல் எனக்கு எப்படி வந்தததோ அதைபோல தான் பத்திரிகையாளர்களுக்கும் கிடைத்திருக்கும். விசாரணை இப்படித்தான் நடக்கும் என்றால் கால் டீட்டெய்லை எனக்கு வெளியிடத் தெரியும்.
லீக் ஆன எப்.ஐ.ஆர் பத்திரிக்கையாளர்கள் போனில் இருந்தால்தான் அவர்கள் சரியாக வேலை செய்திருக்கிறார்கள் என்று அர்த்தம். இந்த விஷயத்தில் நாங்கள் பத்திரிகையாளர்கள் பக்கம் உள்ளோம். பத்திரிக்கையாளர்கள் கைது செய்யப்பட்டால் பாஜகவின் வழக்கறிஞர்கள் அவர்களுக்காக நீதிமன்றத்தில் ஆஜர் ஆவார்கள்" என பேசினார்.