பாஜகவில் இருந்து விலகிச் செல்லும் முக்கிய நிர்வாகிகள் - காரணம் சொல்லும் அண்ணாமலை
அதிமுகவுடனான கூட்டணி சிறப்பாக உள்ளதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
கோவை செவபுரம் தொகுதியில் பாஜக சார்பில் "நம்ம ஊரு மோடி பொங்கல் விழா" எனும் தலைப்பில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. அங்கு 108 பொங்கல் பானைகளில் பொங்கல் வைக்கப்பட்டதுடன் கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன. இதில் சிறப்பு விருந்தினராக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கலந்துகொண்டு அனைவருக்கும் பொங்கல் வாழ்த்து தெரிவித்தார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், குடியரசு தின விழாவில் தமிழக அரசின் ஊர்தி நிராகரிக்கப்பட்டது குறித்து கருத்து தெரிவித்தார். அப்போது வ.உ.சி., வேலு நாச்சியார் ஆகியோர் தேசிய தலைவர்கள் இல்லை என்பது மத்திய அரசின் கருத்து அல்ல எனவும், ஒவ்வொரு ஆண்டும் பாதுகாப்பு துறை அமைச்சகம் குடியரசு தின விழாவில் பங்கேற்கும் ஊர்திகள் தொடர்பாக ஒரு குழு அமைத்து எந்தெந்த பொருட்கள் ஊர்தியில் இடம்பெற வேண்டும் என்பது குறித்து ஆலோசனை வழங்கும் எனவும் கூறினார்.
மேலும் தமிழக அரசின் ஊர்தி நிராகரிக்கப்பட்டது தொடர்பாக மத்திய அரசின் விளக்கத்தை கேட்டு உரிய முறையில் பதில் அளிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார். அதேபோல் உத்திரபிரதேசத்தில் குடும்ப உறுப்பினர்களுக்கு சீட் வழங்க முடியாது என்ற நிலைப்பாடும், சாதி அரசியல் செய்யக்கூடாது என்ற நிலைப்பாடுகளால் பலர் விலகி சென்றுள்ளதாகவும், நிச்சயம் பாஜக உபி தேர்தலில் 300க்கும் மேற்பட்ட இடங்களில் வெல்லும் எனவும் அண்ணாமலை கூறியுள்ளார்.