ஸ்டாலின் மருமகன் அதானியை சந்தித்தார்; ஆதாரம் வெளியிடவா? - அண்ணாமலை சவால்
அதானியை முதல்வர் மருமகன் சபரீசன் சந்தித்தற்கான ஆதாரம் உள்ளதாக அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
அண்ணாமலை
சென்னையில் உள்ள பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் தமிழ்நாடு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
அப்போது பேசிய அவர், நீதிமன்றம் உத்தரவிட்டும், இந்து சமய அறநிலையத்துறையின் கணக்கு வழக்கு தொடர்பான ஆவணங்களை சிஏஜிக்கு வழங்கப்படவில்லை. தலைமை செயலாளரை3 முறை பார்த்தும் எந்தவித தகவலும் கிடைக்கவில்லை என்று தணிக்கை துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தணிக்கை அறிக்கை
எனவே தான் கோயில்கள் அறநிலையத்துறையின் கீழ் இருக்கக் கூடாது என்று கூறுகிறோம். இந்த விவகாரத்தில் தமிழக அரசு மீது நீதிமன்ற அவமதிப்பு மனு தாக்கல் செய்ய இருக்கிறோம். தமிழகம் எந்த அளவிற்கு பின்னோக்கி சென்று கொண்டிருக்கிறது என்பது தணிக்கை அறிக்கை மூலம் தெளிவாக தெரிகிறது. குறிப்பாக போக்குவரத்து துறை மோசமான நிலையில் உள்ளது.
அதானிக்கு திமுக அரசு ஒப்பந்தம் கொடுத்திருப்பதை தொடர்ந்து பேசி வருகிறோம். அமைச்சர் ஒருவர் அது அதிமுக ஆட்சியில் வழங்கப்பட்டது என்கிறார். ஆனால் திமுக ஆட்சியிலும் ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளது.
அதானி சபரீசன் சந்திப்பு
முதல்வர் சட்டசபையில் பேசும் போது, அதானியை சந்தித்ததாக எதிர்க்கட்சிகள் அபாண்ட குற்றச்சாட்டை சுமத்துவதாகக் கூறினார். முதல்வர் அதானியை சந்தித்தார் என்று நாங்கள் சொல்லவே இல்லை. அதானியை சந்திப்பது குற்றமே இல்லை.
நீங்கள் அதானிக்கு ஒப்பந்தம் அளித்துள்ளீர்கள் என்பது தான் கேள்வி. போன வாரம் கூட சந்திப்பு நடந்துள்ளது. முதல்வரின் சார்பில் அரசு அதிகாரிகளும், அதானி நிறுவன அதிகாரிகளும் சந்தித்துள்ளனர்.
முதல்வரின் மருமகன் சபரீசன் அதானியை சந்தித்துள்ளார். உங்கள் மருமகன் சந்திப்பது நீங்கள் சந்தித்ததைப் போலத் தானே. சபரீசனும் அதானியும் இதுவரை சந்திக்கவில்லை என முதல்வர் சட்டசபையில் சொல்வாரா? அவ்வாறு சொன்னால் நாங்கள் ஆதாரத்தை வெளியிடத் தயார்" என பேசினார்.