டாஸ்மாக் கடைகளை படிப்படியாக மூடிவிட்டு கள்ளுக்கடைகளை திறக்க வேண்டும் - அண்ணாமலை

BJP K. Annamalai
By Thahir Aug 13, 2022 05:21 AM GMT
Report

பா.ஜ.க விவசாய அணி பிரிவின் மாநில செயற்குழு கூட்டம் விவசாய அணி தலைவர் நாகராஜ் தலைமையில் திருச்சியில் நடைபெற்றது. இதில் பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டார்.

முதலமைச்சர் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்

கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை, மத்திய அரசு ஒரு லட்சம் கோடி விவசாய உட்கட்டமைப்பு நிதியை ஒதுக்கி உள்ளார்கள்.தமிழகத்துக்கு ஒதுக்கப்பட்ட சுமார் 6000 கோடி நிதியில் குறைந்த அளவு மட்டுமே பணத்தை பெற்றுள்ளனர்.

K. Annamalai

தமிழ்நாட்டில் உள்ளாட்சி அமைப்புகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட பட்டியல் இன தலைவர்கள் அமர்வதற்கு இருக்கையும், தேசிய கொடியை ஏற்றும் உரிமையும், பெயர் பலகையை வைக்க உரிமையும் மறுக்கப்படுகிறது.

ஆனால் சமத்துவம், சமூக நீதி குறித்து தமிழகத்தில் தான் அதிகம் பேசப்படுகிறது. எனவே இதில் தமிழ்நாடு முதலமைச்சர் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.

மதுபான கடைகளை மூட வேண்டும்

தமிழகத்தில் சமநீதி, சமூக நீதி என்பது கேள்விக்குறியாகி வருகிறது போதைப்பொருளை ஒழிக்க முதல் கட்டமாக மதுபான கடைகளை மூட வேண்டும். ஆனால் மாவட்டம் தோறும் ஆட்சியரை கொண்டு மீட்டிங் நடத்தி வருவாயை பெருக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

தமிழக அரசு டாஸ்மாக்கை மூடாமல் போதை பொருளை ஒழிக்க முடியாது, அரசியல் பின்புலன் உள்ளவர்கள், நாடாளுமன்ற, உறுப்பினர்கள் சட்டமன்ற உறுப்பினர்கள் பலரும் சாராய ஆலையை இயக்கி வருகிறார்கள்.

தாங்கள் ஆட்சிக்கு வந்தால் தங்கள் கட்சியினர் நடத்தும் மதுபான ஆலைகள் மூடப்படும் என்று சொன்ன கனிமொழிகூட தற்போது வாயை திறப்பதில்லை, எதிர்க்கட்சியாக இருக்கும்போது போராட்டம் நடத்திய ஸ்டாலின் தற்போது ஆளுங்கட்சிக்கு வந்த பின்னர் டாஸ்மாக் வருவாயை மட்டுமே கருத்தில் கொண்டு செயல்படுகிறார் டாஸ்மாக் மூடல் குறித்து வாயை கூட திறப்பதில்லை.

மின்சார திருத்த சட்டத்தால் யாருக்கும் எங்கேயும் பாதிப்பு ஏற்படுத்தாது. அச்சட்டத்தால் விவசாயிகளுக்கான இலவச மின்சாரம் நிறுத்தப்படும் என கூறுவது தவறு. மின்சார பயன்பாடு குறித்த அளவீடு கணக்கெடுக்கப்படும்.

இந்த சட்டம் வரும்போது தமிழகத்தில் ஊழல் செய்த மின்துறை அமைச்சர்கள் சிறைக்குச் செல்லும் நிலை ஏற்படும்.

ஆளுநர் - ரஜினி சந்திப்பை வியாபாரம் செய்கிறார்கள் 

யாரும் யாருடன் வேண்டுமானாலும் அரசியல் பேசலாம்.ரஜினி ஆளுநரை சந்தித்திருப்பதை வைத்து சிலர் தான் அதை அரசியலாக்குகிறார்கள். வேலையில்லாத அரசியல்வாதிகள் பலர் இதை வைத்து வியாபாரம் செய்கிறார்கள்.

Rajinikanth

ஆவின் பால் விலையை தமிழ்நாடு அரசு தொடர்ந்து உயர்த்தி வருகிறார்கள். ஆவின் விலை உயர்வு தான் தனியார் பால் நிறுவனங்கள் விலையை உயர்த்துவதற்கு காரணம்.

மதுவிலக்கு தொடர்பாக ஒவ்வொரு மாநிலமும் அந்த அந்த மாநிலத்தின் நிலைமையை வைத்து முடிவெடுக்க வேண்டும்.

தமிழ்நாட்டில் ஏழைத்தாயின் தாலியை அறுக்கும் வகையில் மது அதிகப்படியாக விற்கப்படுகிறது. டாஸ்மாக்கால் தான் பல்வேறு பிரச்சனைகள் வருகிறது.

டாஸ்மாக்கை வைத்து தான் அரசியல் நடத்த வேண்டும் என்று திமுக நினைத்தால் மக்களை எதற்காக பகடைக்காயாக பயன்படுத்த வேண்டும், எனவே தான் தமிழ்நாட்டில் மதுவிலக்கை கொண்டுவர வேண்டும் என்கிறோம்.

கள்ளுக்கு அனுமதி வழங்கினால் அது விவசாயிகளுக்கு உதவியாக இருக்கும். மதுக்கடையை படிப்படியாக மூடிவிட்டு கள்ளுக்கடையை திறக்க வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.