உதயநிதிக்கு கமலாலயம் வர அறுகதையில்லை : ஆவேசமான அண்ணாமலை
உதயநிதி ஸ்டாலின் சினிமாவில் நடிப்பதை குறைத்து விட்டு மக்கள் பணி செய்தால் மட்டுமே கமலாலயம் வர தகுதியுண்டு என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
சில தினங்களுக்கு முன் சட்டசபை முடிந்து வெளியே வந்த எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி திமுகவின் சேப்பாக்கம் தொகுதி எம்.எல்.ஏ., உதயநிதி ஸ்டாலின் காரில் ஏற முயன்றார். அப்போது அங்கிருந்த பாதுகாவலர்கள் அவரை தடுத்து நிறுத்தி சரியாக வழி காட்டினர். இந்த வீடியோ இணையத்தில் வைரலானது.
இதனைத் தொடர்ந்து நேற்றைய தினம் சமூக நலத்துறை மீதான மானியக் கோரிக்கை விவாதத்தில் பேசிய உதயநிதி ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமியை குறிப்பிட்டு நீங்கள் மட்டும் இல்லை நானும் 3 நாட்கள் முன்பு உங்க காரில் ஏற சென்றேன் என கூறினார். நீங்கள் தாரளமாக என் காரை எப்போது வேண்டுமானாலும் எடுத்து செல்லலாம். ஆனால் அந்தக் காரை எடுத்துவிட்டு கமலாலயத்திற்கு மட்டும் சென்று விடாதீர்கள் என பேசியதும் பேரவையில் சிரிப்பலை எழுந்தது.
இதற்கு பதிலளித்துப் பேசிய எதிர்கட்சித் துணை தலைவர் ஓ.பன்னீர்செல்வம் எங்கள் கார் எப்போதும் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் மாளிகைக்கு தான் செல்லும் என தெரிவித்தார். இந்நிலையில் கோவை விமான நிலையத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம் இதுகுறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு உதயநிதி ஸ்டாலினின் கார் கமலாலயம் வர தகுதியில்லை. மேலும் உதயநிதி சினிமாவில் நடிப்பதை குறைத்து விட்டு மக்கள் பணி செய்தால் மட்டுமே கமலாலயம் வர அருகதையை அவர் பெறுவார். அந்த கார் கமலாலயம் வர ஸ்டார்ட் செய்தால் கார் ஸ்டார்ட் ஆகாது எனவும் அண்ணாமலை கூறினார்.