ஆற்காடு வீராசாமி குறித்து பேசியதற்கு வருத்தம் தெரிவித்தார் அண்ணாமலை..!

K. Annamalai
By Thahir Jun 11, 2022 03:10 AM GMT
Report

முன்னாள் அமைச்சர் ஆற்காடு வீராசாமி குறித்து பேசியதற்கு வருத்தம் தெரிவித்தார் பாஜக தலைவர் அண்ணாமலை.

சர்ச்சை கருத்து

கடந்த புதன்கிழமை நாமக்கல்லில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் நீட் தேர்வு குறித்து பேசிய அண்ணாமலை, ஆற்காடு வீராசாமி கூறியதாக ஒரு தகவலை சொல்லும்முன், அவர் இறைவனடி சேர்ந்து விட்டதாக பேசியிருந்தார்.

ஆற்காடு வீராசாமி குறித்து பேசியதற்கு வருத்தம் தெரிவித்தார் அண்ணாமலை..! | Annamalai Regretted Talking About Arcot Veerasamy

85 வயதான ஆற்காடு வீராசாமி உயிருடன் உள்ள நிலையில், அண்ணாமலை பேசியதன் உண்மைத்தன்மை அறியாமல் அந்த வீடியோவை சமூக வலைதளங்களில் அவரது ஆதரவாளர்கள் பகிர்ந்தனர்.

கண்டனம்

இந்நிலையில் அண்ணாமலையின் பேச்சுக்கு ஆற்காடு வீராசாமியின் மகன் கலாநிதி வீராசாமி கடும் கண்டனம் தெரிவித்தார்.

கொள்ளு பேரனின் பிறந்தநாள் விழாவில் குடும்பத்துடன் கலந்துகொண்டு மகிழ்ந்தார் எங்கள் ஆருயிர் ஆற்காட்டார்.

எங்கள் இயக்க தலைவர்கள் குறித்து எப்போதும் உளறும் பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை என் தந்தை பற்றி தவறான கருத்தை கூறியதற்கு வேதனையுடன் வன்மையாக கண்டிக்கிறேன். அவர் நலமாக உள்ளார்.

இன்றும் பலருக்கு நன்மை செய்து கொண்டு இருக்கிறார். நாகரீகமற்ற முறையில் உளறுவதை அண்ணாமலை இனியாவது நிறுத்திக் கொள்ள வேண்டும்.

இல்லையேல் எதிர்வினை இது போன்று சாதாரணமாக இருக்காது என்று எச்சரிக்கிறேன் என கலாநிதி வீராசாமி அறிக்கை வெளியிட்டார்.

வருத்தம் தெரிவித்த அண்ணாமலை

இந்நிலையில் தனது பேச்சுக்கு அண்ணாமலை வருத்தம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர், Dr. உங்களுடைய தந்தையார் அண்ணன் ஆற்காட்டார் அவர்கள் நீண்ட ஆயுளோடு உங்கள் அனைவருடைய அரவணைப்போடு நன்றாக வாழ்வதற்கு இறைவனை வேண்டுகிறேன்!

நாமக்கல் பொதுக்கூட்டத்தில் தவறுதலாக உங்களுடைய தந்தையார் இறைவனடி சேர்ந்து இருக்கின்றார் என்று சொன்ன கருத்துக்காக வருந்துகின்றேன் என்று குறிப்பிட்டுள்ளார்.