அண்ணாமலை vs நயினார் நாகேந்திரன் - யார் அதிமுகவை சிறப்பாக கையாண்டது?
அதிமுக பிரச்னையை அண்ணாமலை அணுகியதற்கும் நயினார் நாகேந்திரன் அணுகுவதற்குமான வித்தியாசங்கள் வெளிப்படையாகத் தெரியத் தொடங்கியுள்ளன.
அதிமுக பிரச்னை
கொங்கு மண்டலத்தில் எடப்பாடி பழனிசாமியை விட நான் தான் பெரிய ஆள் என நிறுவுவதற்கான முயற்சியிலிருந்து அண்ணாமலை அதிமுகவைக் கையாண்டார். எடப்பாடி பழனிசாமியின் வலிமையைக் குறைத்து கொங்கு மண்டலத்தின் அரசியல் அடையாளமாக தன்னை நிறுவுவதற்காகவே ஓபிஎஸ்,
டிடிவி போன்றவர்களோடு அதிகமான அணுக்கத்தை ஏற்படுத்திக் கொண்டார். நயினார் நாகேந்திரன் அப்படியே நேர்மாறாக ஓபிஎஸ், டிடிவி என அவர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் வலிமை பெறுவது நல்லதல்ல என்பதால் எடப்பாடி பழனிசாமி பக்கம் நிற்கிறார்.
அதிமுகவில் இருந்த போது, ஓபிஎஸ், டிடிவி போன்றவர்களால் தனக்கு நேர்ந்த சில விஷயங்களுக்கு நயினார் இப்போது பலிவாங்கும் நோக்கில் நடந்துக்கொள்வது கவனிக்கத்தக்கது. இதுவரையில் அதிமுக-பாஜக உறவு ஒரு மாநிலக் கட்சியை தேசியக் கட்சி கட்டுப்பாட்டில் எடுக்க முயல்கிறது என்ற வகையில் இருந்தது.
அண்ணாமலை vs நயினார்
ஆனால் இப்போது பழைய அதிமுகவினரின் ஈகோ பிரச்னையாக மாறியிருக்கிறது. அதிமுகவின் ஒரு அணியாகவே இந்தப் பிரச்னையில் நயினார் செயல்படுகிறார். நயினார் நாகேந்திரனின் இந்தக் கணக்குகளை பொதுவெளியில் போட்டு உடைத்திருக்கிறார் டிடிவி தினகரன்.
தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து விலகுவதாக அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அறிவித்திருந்த நிலையில், அண்ணாமலை மற்றும் நயினார் நாகேந்திரன் குறித்து அவர் ஒப்பிட்டு பேசியுள்ளார்.
அண்ணாமலை பாஜக தலைவராக இருந்தவரை அவர் சரியாக அனைத்தையும் கையாண்டார். நயினார் நாகேந்திரன் எனது நண்பர்தான், ஆனால் அவர் சரியாக கையாளவில்லை என தெரிவித்துள்ளார். இந்த ஆட்டம் நாளுக்கு நாள் சுவாரசியமாகவே மாறுகிறது.