அமித் ஷாவுக்கு முன்பே குருமூர்த்தியை சந்தித்த அண்ணாமலை - அடுத்த பாஜக தலைவர் இவர்தான்?
ஆடிட்டர் குருமூர்த்தியை, அண்ணாமலை சந்தித்து பேசியுள்ளார்.
ஆடிட்டர் குருமூர்த்தி
தமிழக சட்டசபை தேர்தல் அடுத்த வருடம் நடைபெறவுள்ளது. இந்த சூழ்நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி டெல்லியில் அமித்ஷாவை சந்தித்து பேசியிருந்தார்.
தொடர்ந்து அண்ணாமலை விரைவில் மாற்றப்படக்கூடும் என்கிற தகவல் வெளியானது. அதன்படி, தமிழகத்தின் புதிய பாஜக தலைவருக்கான போட்டியில் அண்ணாமலை தான் இல்லை என்று அறிவித்தார். எனவே, அடுத்தபடியாக நயினார் நாகேந்திரனுக்கு அதிக வாய்ப்புள்ளதாக கூறப்பட்டது.
ஆனால், 10 வருடம் கட்சியில் இருந்தால்தான் போட்டியிட முடியும் என்ற விதிமுறை வந்துள்ளது. நயினார் நாகேந்திரன் பாஜகவில் இணைந்து 8 ஆண்டுகள்தான் ஆகிறது. எனவே, வானதி சீனிவாசன், தமிழிசை சவுந்தரராஜனுக்கு வாய்ப்பு இருக்கலாம் என தெரிகிறது.
அண்ணாமலையுடன் சந்திப்பு
அதேபோல் புளியங்குடியை சேர்ந்த ஆனந்தன் அய்யாசாமி என்பவருக்கு அதிக வாய்ப்பு இருக்கலாம் என்ற தகவல் வலம் வந்த வண்ணம் உள்ளது. இந்நிலையில், தற்போது அமித்ஷா சென்னை வந்துள்ளார். மூத்த பாஜக ஆதரவாளர் குருமூர்த்தியை சந்தித்து பேசவுள்ளார்.
முன்னதாக சென்னை மயிலாப்பூரில் உள்ள குருமூர்த்தி வீட்டிற்கு சென்ற அண்ணாமலை, சுமார் 1 மணி நேரம் சந்தித்து பேசியுள்ளார். குருமூர்த்தி அதிமுக மற்றும் பாஜகவுக்கு நெருக்கமான நபராக பார்க்கப்படுவதால், அமித்ஷாவுடனான இன்றைய சந்திப்பு கவனம் பெறும்.
இதற்கிடையில், தமிழக பாஜக தலைவர் பதவிக்கான தேர்தலில் போட்டியிட விருப்பம் உள்ளவர்கள், இன்று மதியம் 2 மணி முதல் 4 மணி வரை வேட்புமனுக்களை மாநில தலைமை அலுவலகத்தில் வழங்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.