உதயமாகிறதா கொங்கு ஜனதா கட்சி? அண்ணாமலை தனி ஆவர்த்தனம்?
தமிழ்நாடு பாஜக தலைவர் பதவியிலிருந்து நீக்கப்பட்ட அண்ணாமலையின் செயல்பாடுகள் புதிய தலைவர் நயினார் நாகேந்திரனுக்கும் பாஜகவிற்கும் எச்சரிக்கை மணியடிப்பதாக மாறியிருக்கின்றன.
போதாக்குறைக்கு அண்ணாமலையிடம் நயினார் நாகேந்திரன் ஜாக்கிரதையாக இருக்க வேண்டுமென்று கொளுத்திப் போட்டிருக்கிறார் விசிக தலைவர் திருமாவளவன்.
என்ன செய்கிறார் அண்ணாமலை?
2026 சட்டப்பேரவைத் தேர்தல் வரை தான் தலைவர் பதவியிலிருந்து மாற்றப்பட மாட்டோம் என உறுதியாக நம்பிக் கொண்டிருந்தார் அண்ணாமலை.
ஆனால் அதிமுகவுடனான கூட்டணி உறுதியாவது என பல தேவைகள் இருந்ததால் அண்ணாமலை மாற்றப்பட்டார். ஆந்திராவிலிருந்து மாநிலங்களவைக்கு தேர்வாகி மத்திய அமைச்சராகிறார் என்ற தகவல்களும் வதந்தியாகவே மாறியிருக்கிறது. இந்த நிலையில் அண்ணாமலை கையிலெடுத்திருக்கும் அரசியல் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
ஈரோட்டில் செய்தியாளர்களைச் சந்தித்த அண்ணாமலை அதிமுக-பாஜக கூட்டணி பற்றியும் திமுக அரசு பற்றியும் சில விமர்சனங்களை முன்வைத்திருக்கிறார். ஈரோடு மாவட்டம் சிவகிரியில் தனியாக வசித்த தம்பதியினர் கொலை செய்ய்யப்பட்ட குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தி நடைபெற்ற போராட்டத்தில் ஆவேசமாக உரையாற்றியவர் திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டிருப்பதாக கண்டித்தார்.
அத்தோடு நிறுத்தியிருந்தால் பரவாயில்லை. அடுத்து அவர் வைத்தது முக்கியமான ட்விஸ்ட். இன்னும் 2 வாரங்களில் கொலையாளிகள் கைது செய்யப்படவில்லையென்றால், மே 20 முதல் சிவகிரியில் தனது தலைமையில் உண்ணாவிரதம் நடக்கும் என அறிவித்திருக்கிறார்.
பாஜகவின் தமிழ்நாடு தலைமையிடம் அனுமதி பெறப்பட்டதா என்ற சந்தேகமும், அண்ணாமலை தனி ஆவர்த்தனத்திற்கு தயாராகிறாரா என்ற கேள்வியும் சேர்ந்தே எழுகின்றன. இந்தக் கேள்விக்கும் சந்தேகத்திற்கும் வலு சேர்க்கும் விதமாக இன்னொரு ட்விஸ்டையும் அங்கேயே வைத்தார் அண்ணாமலை. அதிமுக- பாஜக கூட்டணி திமுகவை வீழ்த்தி விடும் என்று எனக்குத் தோன்றவில்லை என்றார்.
கூட்டணி பற்றி தலைவர்கள் பேசுவார்கள் என்று டிஸ்க்ளைமரோடு பேசினாலும், திமுக ஆட்சியை அகற்றி விட்டு நீங்கள் ஆட்சிக்கு வந்து என்ன செய்யப் போகிறீர்கள் என்று மக்கள் கேட்பார்கள்; எண்ணிக்கை முக்கியமில்லை என்றிருக்கிறார். திமுக ஆட்சியை அகற்ற வேண்டும் என்பதை முன்வைத்தே அதிமுக பாஜக கூட்டணி மீண்டும் உருவாக்கப்பட்டது. அந்தக் கூட்டணியில் இன்னும் பல கட்சிகளை இணைப்பதற்கான முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
திமுக எதிர்ப்பு என்ற புள்ளியில் இப்படியான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், எண்ணிக்கையின் அடிப்படையில் முடிவு செய்ய முடியாது என்ற அண்ணாமலையின் கருத்து மொத்த முயற்சிகளையும் கேள்விக்குள்ளாக்குவது போல் இருக்கிறது. அண்ணாமலை மாற்றப்பட்டு அதிமுக-பாஜக கூட்டணி உருவாக்கப்பட்டதில் இருந்தே அண்ணாமலையின் ஆதரவாளர்கள் சமூக வலைத்தளங்களில் அதனை விமர்சித்து வருகின்றனர்.
பாஜகவை வளர்க்க நினைத்த அண்ணாமலையை காலி செய்து அமைக்கப்பட்ட கூட்டணி வெற்றி பெற முடியாது என்று பேசி வந்தனர். இப்போது வெளிப்படையாக அண்ணாமலையே அந்த குரலில் பேசத் தொடங்கியிருக்கிறார். என் மண் என் மக்கள் என்ற பெயரில் அண்ணாமலை தமிழ்நாடு முழுக்க யாத்திரை போன போதே பாஜகவைத் தாண்டி அவரை ப்ரோமோட் செய்கிறார் என்ற குற்றச்சாட்டுகள் எழுந்தன.
தேசியக் கட்சி ஒன்றின் மாநிலத் தலைவராக இருப்பதை விட ஒரு தனிக்கட்சியின் தலைவராக இருக்க வேண்டுமென்பதற்காக அண்ணாமலை காய் நகர்த்துவதாக கூறப்பட்டது. கொங்கு ஜனதா கட்சி அல்லது கொங்குநாடு ஜனதா கட்சி போன்ற பெயர்களும் புழக்கத்திற்கு வந்தன. பாஜகவில் போதிய முக்கியத்துவம் கிடைக்காததால் தனக்கு வேறு வாய்ப்புகள் இருக்கின்றன என்பதை கட்சிக்கு உணர்த்துவதற்காக அண்ணாமலை இதனை செய்கிறாரா என்பதையும் பார்க்க வேண்டியிருக்கிறது.
ஈரோட்டில் அண்ணாமலை முன்னெடுக்கும் தனி ஆவர்த்தனம் பாஜகவில் அவருக்கு முக்கிய பதவியை கொடுக்கிறதா அல்லது தமிழ்நாட்டில் புதிய கட்சியை உருவாக்குகிறதா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

Optical illusion: படத்தில் நூற்றுக்கணக்கான “7” களில் மறைந்திருக்கும் ”9” ஐ கண்டுபிடிக்க முடியுமா? Manithan
